கடனைத் திருப்பித் தராத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது!
வெறும் 1500 ரூபாய் கடனைத் திருப்பித் தராத 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் அருகில் உள்ள முரத்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வருடம் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதில் பெயில் ஆனதால், படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரில் நடந்த திருவிழாவுக்காக, தனக்குத் தெரிந்த ஷாகித்திடம் 1,500 ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவர், ஆயிரம் ரூபாயும் அவர் நண்பர் மோகன்லாலிடம் 500 ரூபாயும் வாங்கி உமாவிடம் கொடுத்துள்ளார். சொன்ன தேதியில் உமா திருப்பித் தரவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவர் பிறகு தருவதாகச் சொன்னாராம்.
இதையடுத்து கடந்த புதன்கிழமை, பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் உமாவை வழிமறித்த ஷாகித்தும் அவர் நண்பர் மோகனும் பணத்தைக் கேட்டுள்ளனர். உமா, வழக்கம் போல இன்னொரு நாள் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரை வயலுக்குள் இழுத்துச் சென்று இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதற்கு சிறுவன் ஒருவனும் உடந்தையாக இருந்துள்ளான். இதையடுத்து உமாவின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். காஸியாபாத் போலீசார் ஷாகித், மோகன் லால் ஆகியோரை கைது செய்தனர்.
வெறும் 1500 ரூபாய் கடனுக்காக இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.