பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF-ன் பின்னணி என்ன? காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தது ஏன்?
காஷ்மீரில் பஹல்காம் படுகொலையை நிகழ்த்தி நாட்டையே அச்சுறுத்தியுள்ளது TRF பயங்கரவாத அமைப்பு... தி ரெஸிஸ்டென்ஸ் ஃபிரண்ட் எனப்படும் பயங்கரரவாத அமைப்பு எப்படி உருவானது? எதற்காக சுற்றுலாப் பயணிகளை கொன்று குவித்தது? அந்த பயங்கரவாத அமைப்பின் நோக்கம் என்ன?
காஷ்மீரின் சுற்றுலா தளங்களில் ஒன்றான பஹல்காம் பகுதியில் உள்ள புல்வெளியில், குடும்பங்கள் பொழுதை கழித்த தருணத்தில் நிகழ்ந்தது அந்த கொடூர சம்பவம். ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள், ஆண்களை மட்டும் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். கணவரை சுட்டுவிட்டு, பிரதமர் மோடியிடம் கூறுங்கள் என பயங்கரவாதி ஒருவன் கூறியதாக தப்பிவந்த பெண், அச்சம் கலந்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டையே அச்சுறுத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்திற்கு TRF எனப்படும் தி ரெஸிஸ்டென்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
TRF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு, காஷ்மீரில் 85,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் போல் வரும் வெளியூர்வாசிகள் இருப்பிடச் சான்றிதழ்களைப் பெற்று, நிலத்தின் உரிமையாளர்கள் போல் செயல்படுவதாகவும் TRF பயங்கரவாத அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி சைப்ஃபுல்லா கசூரி என்ற காலித் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவராக இருக்கலாம் என உளவுத் துறை சந்தேகித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்களின் பங்கும் இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இந்த அமைப்பிற்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறப்படுகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பிறகே, இந்த TRF பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ளது. 2019இல் நிறுவப்பட்ட TRF, இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஆன்லைனில் ஆட்சேர்ப்பு வேலையை செய்ததாகவும், பயங்கரவாதிகள் ஊடுருவ உதவுதல் மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஜம்மு- காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பாக கருதப்படும் இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்த அமைப்பின் தளபதி ஷேக் சஜ்ஜத் குல் இந்திய சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். TRF அமைப்பு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது இது முதல்முறையல்ல. ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது இந்த அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. 2020ஆண்டு குப்வாராவின் கெரன் செக்டாரில் TRF தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2024ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலில், மருத்துவர் உட்பட 7 புலம்பெயர் தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். அமைப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதுடன், வெளியூர் வணிகங்களையும், வெளியாட்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்படுவதையும் தடுப்பதையே இலக்காக கொண்டுள்ளது. "காஷ்மீரில் குடியேற வரும் எந்த இந்தியரும் ஆர்எஸ்எஸ் ஏஜெண்டாகவே கருதப்படுவார்" என்று ஏற்கெனவே TRF தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. "வெற்றியடையும் வரை எதிர்ப்போம்" என்ற முழக்கத்துடன் செயல்படும் TRF அமைப்பு, தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.