ஜம்மு காஷ்மீர் | பயங்கரவாதிகள் அத்துமீறல்.. இதுவரை நடைபெற்ற தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த நிலையில் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை ஜம்மு காஷ்மீரில் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்கள்
* பஹல்காம் பகுதியில் பல ஆண்டுகளாக அவ்வப்போது பயங்கரவாத வன்முறைகள் நடந்துள்ளன. 2000ஆம் ஆண்டில், அப்பகுதியில் உள்ள அமர்நாத் தள முகாம் மீதான தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* 2000ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, தெற்கு காஷ்மீரில் உள்ள சத்தீசிங்போராவில் 35 சீக்கியர்களைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
* 2001ஆம் ஆண்டு, ஷேஷ்நாக்கில் நடந்த தாக்குதலில் 13 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
* 2002இல், மற்றொரு பயங்கரவாத சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
* 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு தற்போது நடத்தப்பட்ட தாக்குதல் மிக மோசமானதாகப் பார்க்கப்படுகிறது.