நடுவானில் தீப்பிடித்து எரிந்த இந்திய விமானம்: அலறிய 174 பயணிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !
இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து பயணிகளை அதிர்ச்சியடையச் செய்தது. ஹைதராபாத் அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டு, தீயை முழுமையாக அணைக்க மீட்பு படையினர் உதவினர். பவர் பேங்கில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 180 பேரோடு சென்னைக்கு கிளம்பியுள்ளது. இந்த விமானம் மதியம் 1.10 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய நிலையில், 20 நிமிடங்கள் தாமதமாக மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் ஹைதராபாத் அருகே வந்த நிலையில், சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் கேபினில் இருந்து சிறிய அளவில் புகை வந்துள்ளது. இதனை பார்த்த சில விமான பயணிகள், விமான பணிப்பெண்களுக்கு தகவல் கூற, உடனடியாக இது விமானிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக விமானிகள் ஹைதராபாத் விமான நிலையத்தின் அவசர கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புக் கொண்டு விமானத்தின் நிலை குறித்து தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு தயாராகியுள்ளது. ஆனால், அதற்குள் சிறிய அளவில் வெளிவந்த புகையில் இருந்து தீ பற்றியுள்ளது. இதனை கண்டு அலறிய பயணிகள் விமான பணிப்பெண்கள் உதவியுடன் தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கப் போராடியுள்ளனர்.
இதனிடையே சுமார் பிற்பகல் 3 மணியளவில் விமானத்தை விமானி அவசர அவசரமாகத் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். பயணிகள் வேகமாக விமானத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த மீட்பு படையினர் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர்.
பின்னர் மாற்று இண்டிகோ விமானம் மூலம் பயணிகள் மாலை 6 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனிடையே தீ விபத்துக்கான காரணம் குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கொண்டுவந்திருந்த பவர் பேங்கில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. எனினும் விபத்துக்கான முழு விவரமும் விசாரணை முடிவில்தான் தெரியவரும். இதனிடையே விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

