’ஆபாச அடிமைகள்’ | பிரேசில் பழங்குடியினரை மையப்படுத்தி கட்டுரை.. நியூயார்க் டைம்ஸ் மீது வழக்கு!
பிரேசிலின் அமேசானைச் சேர்ந்தவர்கள், மருபோ பழங்குடியினர். தொலைதூர ஜவாரி பள்ளத்தாக்கில் வசிக்கும், இவர்கள், 2,000 பேர் கொண்ட ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், ஸ்டார்லிங்க் மூலம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இணைய வசதியைப் பெற்றுள்ளனர். அதன்பிறகு அச்சமூகத்தினரின் இணையச் செயல்பாடுகளை, ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், “மருபோ பழங்குடியினர் ஸ்டார்லிங்க் மூலம் இணையத்தைப் பெற்ற ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர்களின் டீனேஜர்கள் தொலைபேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
வன்முறை வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். மோசடிகள், தவறான தகவல்களைப் பார்க்கிறார்கள் மற்றும் சிறார்கள் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு பழங்குடித் தலைவர் இந்த ஆபாசப் படங்களைப் பார்த்து மிகவும் கவலையடைந்ததாகவும், இளைஞர்களிடமிருந்து அதிக வன்முறையான பாலியல் நடத்தைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் அந்த கட்டுரை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டுரையைப் பிற இணையதளங்கள் நகலெடுத்து, ‘எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைப்பு ஒரு தொலைதூர பழங்குடியினரை ஆபாசத்திற்கு அடிமையாக்குகிறது’ என்ற தலைப்பில் செய்திகள் வெளியிட்டுள்ளன.
உலகளவில் 100க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மருபோ ஆபாச அடிமைத்தனத்தை வளர்த்ததாக தவறான கூற்றுக்களைப் பதிவிட்டு தலைப்புச் செய்திகளாக்கி உள்ளன. இது, அந்தப் பழங்குடிச் சமூகத்தினரைக் கவலையடையச் செய்துள்ளது. தாங்கள் பதிவிட்ட செய்திகள் பழங்குடியினரின் இளைஞர்களைக் கேலி செய்வதாகவும், தங்களின் கலாசார மரபுகளைத் தவறாக சித்தரிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, இந்தச் செய்திகள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் மீது மருபோ சமூகத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள், 180 மில்லியன் டாலர்கள் (தோராயமாக ரூ. 1,500 கோடி) இழப்பீடு கோரியுள்ளனர்.
இதற்கிடையே, "ஒரு தொலைதூர அமேசான் பழங்குடியினர் ஆபாசத்திற்கு அடிமையாகவில்லை" என்ற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரையை ’தி நியூயார்க் டைம்ஸ்’ தற்போது வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.