கடவுளின் கோபமா?.. சீரியல் கொலையா? சத்தீஸ்கரை உலுக்கிய 8 கொலைகள்.. வெளியான அதிர்ச்சிப் பின்னணி!
சத்தீஸ்கர் பலோடா பஜார் மாவட்ட கார்வே கிராமத்தில், 58 முதல் 40 வயது வரை 8 பேர் தொடர்ச்சியாக மர்மமாக உயிரிழந்தனர். முதலில் “கடவுளின் கோபம்” என நம்பிய கிராம மக்கள், உயிர் தப்பிய தொழிலாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், கனிவானவராக அறியப்பட்ட மளிகைக் கடை உரிமையாளர் ராம்சஹாய், மதுவில் எலி விஷம் கலந்து 8 பேரையும் திட்டமிட்டு கொன்றது வெளிச்சத்துக்கு வந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறிய பழங்குடியினர் கிராமத்தில், அடுத்தடுத்து நிகழ்ந்த 8 மர்ம மரணங்களை கிராம மக்கள் பல மாதங்களாக "கடவுளின் கோபம்" என்று நம்பி வந்தனர். . பூஜைகள், பரிகாரங்கள் செய்தும் மரணங்கள் தொடர்ந்த நிலையில், உயிர் தப்பிய ஒருவரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து நடந்த மரணங்கள் இயற்கையானவை அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடர் கொலைகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன பார்க்கலாம்.
சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் கார்வே என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1000 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில், 58 வயதான பத்ரி படேல் என்பவர் தனது வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்தார். தொடர்ந்து, பிப்ரவரி 20-ம் தேதி 60 வயதான புத்தாலு சாஹூ உயிரிழந்தார்.
மார்ச் மாதம் 2-ம் தேதி புத்தாலு சாஹூவின் 12 வது நாள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது 59 வயதான முன்னாள் சர்பஞ்ச் சத்துராம் சாஹு குமட்டல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, மார்ச் 12-ம் தேதி புத்ராம் ஜெயஸ்வால் உயிரிழந்தார். எனினும், வயதானவர்களே அடுத்தடுத்து உயிரிழந்திருந்தால், மக்களும் இயற்கையான மரணங்கள் என கருதி வந்திருக்கின்றனர்.
இந்தசூழலில் தான், மார்ச் 31-அன்று 38 வயதான வினோத் சாஹு ஆற்றங்கரையில் சரிந்து விழுந்து உயிரந்தார். இவரது மரணம் கிராம மக்களை வெகுவாக பாதித்தது. காரணம், அவர் மற்றவர்களை விட இளமையானவர். எனினும், இந்த மரணங்களுக்குக் காரணம் "கடவுளின் கோபம்" என்று கிராம மக்கள் நம்பி வந்திருக்கின்றனர். பூஜைகள், பரிகாரங்களையும் செய்து வந்துள்ளனர். இதற்கிடையில், ஏப்ரல் 28 அன்று 55 வயதான கஜானன் மஞ்சி மற்றும் ஏப்ரல் 30 அன்று 59 வயதான சைதுராம் சாஹு என மேலும் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். இது தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியபோதிலும், கிராம மக்கள் அந்த மரணங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை.
மே 14 ஆம் தேதி காலையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 40 வயதான மகேத்ரு உயிரிழந்தார். அப்போதுதான் இறுதியாக ஏதோ சரியில்லை என்பதை கிராம மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து, கிராமத்தின் மையப்பகுதியில், கலந்துரையாடல்கள் தொடங்கின. அப்போதுதான், அவர்கள் ஒரு திடுக்கிடும் விஷயத்தை அறிந்துகொண்டார்கள்: சில நாட்களுக்கு முன்பு, அவர்களில் ஒருவரான, 23 வயது தினக்கூலித் தொழிலாளி கார்த்திக் குமார், ராம்சாஹி கொடுத்த மதுவைக் குடித்த பிறகு நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட கிராம மக்கள், ”ராம்சாஹி கொடுத்த மதுவை நான் அதைக் குடித்தேன், 20 வினாடிகளுக்குள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தேன், 5-6 மணி நேரம் கழித்துதான் எனக்கு நினைவு திரும்பியது எனக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, ஜூன் 6 அன்று ராம்சாஹி பெயரில் புகாரளித்தனர்.
கிராம மக்களின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மரணங்களை உன்னிப்பாக விசாரித்து வந்த நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 49 வயதான ராம்சஹாய் கார்வே கிராமத்தில் மிகவும் கனிவான நபராக அறியப்படுகிறார். மேலும், மளிகைக் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். ராம்சஹாயின் கடைதான் அந்த கிராமத்தின் முதல் மளிகைக் கடை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.
இவர், ஒரு பாட்டில் 120 ரூபாய்க்கு விற்கப்படும் 'கோவா' என்ற மதுபானத்தில் எலி விஷத்தைக் கலந்து கொடுத்து 8 பேரை கொன்றது தெரியவந்துள்ளது. “இந்த வழக்கில் எங்களிடம் வலுவான சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன,” என்று காவல் துணை கண்காணிப்பாளர் கௌஷல் வாஸ்னிக் கூறுகிறார். எனினும், இந்தக் கொலைகளுக்கு காரணமாக கொலையாளி ராம்சஹாய், முன்விரோதம், இலவசமாக மதுகேட்டு மிரட்டியவர்கள், தன்னை கேலி செய்தவர்கள், இழிவாகப் பேசியவர்கள் மற்றும் தன்னுடன் பகை கொண்டவர்களுக்கு விஷம் கலந்து கொடுத்துக் கொன்றதாக அற்பமான காரணங்களையே தெரிவித்திருக்கிறார். இந்தசூழலில் தான், ராம்சஹாய் ஜூன் 22 அன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எப்போதும், பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட ராம்சஹாய் விஷம் கொடுத்து 8 பேரை கொன்றதை நம்ப முடியவில்லை என அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

