\
Assam Businessman Held After Celebrating Wife’s Birthday
Assam Gautam Baruahinsta

மனைவிக்கு பிறந்த நாள் கொண்டாடிய தொழிலதிபர்.. ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்.. நடந்தது என்ன?

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றுப்பாலத்தில், மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடிய தொழிலதிபர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

அசாம் மாநிலம் குவஹாத்தியைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் பருவா, கடந்த ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவில், தனது மனைவிக்கு 42-ஆவது பிறந்தநாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டார். இதற்காகப் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் அமைந்துள்ள புதிய 6 வழிப் பாலத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்த அவர், அப்பாலத்தின் ஒரு பகுதியில் சொகுசு கார்களை நிறுத்திவிட்டு, சாலையில் சிவப்புக் கம்பளம் விரித்து, பலூன்களால் அந்த இடத்தை அலங்கரித்துள்ளார். பின்னர், நடுரோட்டில் கேக் வெட்டி, அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விடியவிடிய ஆட்டம் பாட்டத்துடன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்தக் கொண்டாட்டங்களை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த வீடியோ வைரலானதை அடுத்து, கௌதம் பருவாவும், கொண்டாட்டத்தில் தொடர்புடைய மேலும் 13 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவருடைய சொகுசுக் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொழிலதிபர் தரப்பில் இக்கொண்டாட்டம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகக் கூறப்பட்டாலும், காவல்துறை அதனை ஏற்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற பாலம், கடந்த பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட பிரம்மாண்டமான 'குமார் பாஸ்கர் வர்மா சேது' பாலம் என்பதும் இது, 3 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com