மகாராஷ்ட்ரா | கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் - உடல்நலக்குறைவால் 600 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

மகாராஷ்ட்ராவில் புல்தானா மாவட்டத்தில் நடந்த கோவில் நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட கிராம மக்களில் சுமார் 600 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்pt web

மகாராஷ்ட்ராவின் புல்தானா மாவட்டம் லோனார் தாலுகாவில் உள்ள சோமதானா கிராமத்தில் சர்வ ஏகாதசியை முன்னிட்டு விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 2000 கிராமவாசிகளில் பலரும் பிரசாத்தை உட்கொண்ட நிலையில் 600 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு உட்கொண்ட பலருக்கும் ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டு உடனடியாக வாந்தி மயக்கம், குமட்டல், தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 300 என்றும் சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சலைன் பாட்டில்கள் மரங்களில் தொங்கவிடப்பட்டு சிகிச்சை
சலைன் பாட்டில்கள் மரங்களில் தொங்கவிடப்பட்டு சிகிச்சை

அசுத்தமான அல்லது நச்சுத்தன்மையுள்ள ஏதேனும் பொருட்கள் பிரசாதத்தில் கலந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக பீபி, மெஹ்கர், சிந்த்கெட் ராஜா லோனார் மற்றும் சுல்தான்பூரில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பல இடங்களில் படுக்கைகளின் பற்றாக்குறையால் அவர்களுக்கு வெளியில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தரைகளில் படுக்கை விரிப்பு போடப்பட்டும், அவர்களுக்கான சலைன் பாட்டில்கள் கயிறுகளில் கட்டப்பட்டும், மரங்களில் தொங்கவிடப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாததால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து புல்தானாவில் இருந்து மருத்துவர்கள் குழு சென்றுள்ளது. தனியார் மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

சலைன் பாட்டில்கள் மரங்களில் தொங்கவிடப்பட்டு சிகிச்சை
சலைன் பாட்டில்கள் மரங்களில் தொங்கவிடப்பட்டு சிகிச்சை

சிகிச்சைக்குப் பின் 100 முதல் 150 பேரின் உடல் நிலை சீரானதால் அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். 400 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். அதில் 30 பேரின் தன்மை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு தன்மை கெட்டது குறித்து இன்னும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com