ரூ. 500 கோடி.. இண்டிகோ விமான ரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு.. அறிவித்த நிறுவனம்
சர்வதேச சிவில் விமான அமைப்பினுடைய பரிந்துரைகளின் தொடர்ச்சியாக, இந்திய அரசு தன்னுடைய விதிகளை சமீபத்தில் புதுப்பித்தது. அதன்படி, விமானிகளின் நலனையும் பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேரத்தைக் குறைத்து புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், இந்தப் புதிய விதிகளை அமல்படுத்துதல் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் சரியான திட்டமிடலின்மை போன்றவை காரணமாக 4,500 மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ஒரு வாரங்களைக் கடந்து தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இண்டிகோவின் 10% சதவீத விமான சேவைகளைக் குறைக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், இண்டிகோ விமானம் தொடர்ந்து ரத்தானது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இண்டிகோ நிறுவனத்தை கடுமையாக சாடிய நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக நிவாரணத் தொகை அளிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து இண்டிகோ நிறுவனம், கடுமையான பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்றால் என்ன என்பதையும், இழப்பீடு வழங்குவதற்காக வாடிக்கையாளர்களை எவ்வாறு அடையாளம் காணும் என்பதையும் இண்டிகோ குறிப்பிடவில்லை.
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இண்டிகோ நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், விமானம் புறப்படும் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்ட விமானங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் இழப்பீடு வழங்கும் என்றும் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இண்டிகோ விமான ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளை அடையாள கண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மொத்தமாக 500 கோடிக்கும் மேல் இண்டிகோ நிறுவனம் இழப்பீடு வழங்கவிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

