மருத்துவமனையில் நுழைந்து கொலை குற்றவாளி மீது சரமாறி துப்பாக்கிச் சூடு... பீகாரில் பதற்றம்!
பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்த படுகொலைகள் நடந்து வருகிறது. இது ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியு-பாஜக அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், நேற்று காலை மீண்டும் ஒரு படுகொலை சம்பவம் அரங்கேறி பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளன. இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கிரிமினல் சிறையில் இருந்து பரோலில் வந்தநிலையில், பாட்னா பராஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை திடீரென 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடுத்தடுத்து மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது. ஒவ்வொரு அறையின் கதவையும் திறந்து பார்த்த அந்த கும்பல், சிகிச்சைப்பெற்று வந்த சந்தன் மிஸ்ராவின் அறைக்குள் நுழைந்தவுடன் சந்தன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் சந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கும்பல், சந்தன் மிஸ்ஸாவுக்கு எதிராக செயல்படும் சந்தன் செரு தலைமையிலான ரவுடிகள் என போலீஸார் அடையாளம் கண்டு ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விவாதத்திற்கு மத்தியில்,இது குறித்து பீகார் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) வினய் குமார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” குற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2004 ஆம் ஆண்டு ஆண்டு குற்ற விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தினமும் தோராயமாக நான்கு படுகொலைகள் நடந்தன. அதன் பின்னர், கொலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, சுமார் 2,700 கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2004 உடன் ஒப்பிடும்போது சுமார் 1,300 குறைவு" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், ” பிஹாரில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. அரசு ஆதரவுடன் செயல்படும் குற்றவாளிகள், மருத்துவமனையின் ஐசியு வார்டுக்குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். 2005-ம் ஆண்டுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் பிகாரில் நடைபெறவில்லை” என்றார்.
கடந்த சில வாரங்களாக பல கொலை வழக்குகளுக்கு தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கும் பீகார் , தற்போது இந்த படுகொலை சம்பவத்தின்மூலம் அதை நிருப்பித்துள்ளது.