கண்ணிவெடிகளில் சிக்கும் கப்பல்கள்.. இந்தியாவுக்கு விதிவிலக்கு.. ஈரான் சொன்ன காரணம்!
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கட்டுப்பாடுகளையும் மீறி எண்ணெய்க் கப்பல்கள் எல்லைகளைக் கடந்துசெல்கின்றன. அந்த வகையில், ஹார்முஸ் நீரிணைக்குத் தெற்கே தடைசெய்யப்பட்ட பாதையின் வழியாகச் செல்ல முயன்ற 4 எண்ணெய் டேங்கர் கப்பல்கள், கடற்படை கண்ணிவெடிகளில் மோதி அழிக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை (IRGC) நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா உள்பட 4 நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து ஈரான் விலக்கு அளித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தாம், இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய 4 நாடுகளின் வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சுதந்திரமாகச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த நாடுகளின் கப்பல்களை அமெரிக்கக் கடற்படையும் இடைமறிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலக்கு அளிக்கப்பட்டதற்குப் பின்னால் ஒவ்வொரு நாட்டுடனும் ஈரானுக்கு இருக்கும் தனிப்பட்ட நலன்களும், பரஸ்பர ஒத்துழைப்பும் இருப்பதாக அவர் விளக்கியுள்ளார். குறிப்பாக, இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சீனாவின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டுக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் மொத்த எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போர் தொடங்கியதில் இருந்து இப்பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் குறைந்தது 15 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

