இந்தியா | பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர்களின் இடைநிற்றல்.. மத்திய அரசின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் பள்ளிகளின் நிலை குறித்து மத்திய கல்வித்துறை விரிவான ஆய்வை நடத்தியது. இதில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் மாணாக்கர் எண்ணிக்கை 37 லட்சம் குறைந்து 24 கோடியே 80 லட்சமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 90% பள்ளிகளில் மின்சாரம், இருபாலருக்கான தனித்தனி கழிவறைகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனினும் 57.2% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் இயங்கும் நிலையில் உள்ளதாகவும் 53.2% கணினிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணாக்கர் நலனுக்காக 52.3% பள்ளிகளில் மட்டுமே சரிவுப்பாதை உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இடைநிற்றல் விகிதம் நடுநிலைப்பள்ளிகளில் 5.2% ஆகவும் மேநிலைப்பள்ளிகளில் 10.9% ஆகவும் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மொத்த மாணாக்கரில் மாணவிகள் எண்ணிக்கை 48% ஆகவும் சிறுபான்மை சமூக மாணாக்கர் எண்ணிக்கை 20% ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர் 45%, எஸ்சி மாணாக்கர் 18%, எஸ்டி மாணாக்கர் 10% படிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.