\
31% ethanol in petrol? Karnataka Govt study shocks motorists
e 20reuters

பெட்ரோலில் 31% எத்தனால் கலப்பு? அதிர வைக்கும் கர்நாடக அரசின் ஆய்வு! வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி!

வாகனங்களுக்குப் பயன்படுத்தும் பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாகக் கர்நாடக அரசு நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக நோக்கங்களுக்காக மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் 20 சதவீத கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் E20 திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த எத்தனால் கலப்பு அளவு மற்றும் வாகனங்களின் செயல்திறன் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகின்றன.

e20
e20reuters

இந்தச் சூழலில்தான், கர்நாடக அரசு நடத்திய பெட்ரோல் தரப் பரிசோதனை தற்போது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் வெளியிட்ட தகவலின்படி, கர்நாடகாவில் பெங்களூரு உட்பட 7 மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் மாதிரி ஒன்றில் 31.2 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் மாதிரி ஒன்றில் 30.5 சதவீதமும் எத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், HPCL பெட்ரோலில் 27 சதவீதம், BPCL நிறுவனத்தின் ஸ்பீடு பெட்ரோலில் 26.5 சதவீதம், நயாரா நிறுவனத்தின் பெட்ரோலில் 26.1 சதவீதம், ஷெல் நிறுவனத்தின் பெட்ரோலில் 25.5 சதவீதம் எனப் பல்வேறு மாதிரிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எத்தனால் கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட E20 அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எழுப்பியுள்ள முக்கியமான கேள்வி, அதிகப்படியான எத்தனால் கலப்பால் வாகனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்ததுதான். குறிப்பாக, பெட்ரோலில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டால், அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்படாத வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எத்தனால் கலப்பு அதிகரிப்பதால் வாகனங்களின் மைலேஜ் குறையலாம் என்றும், ஃப்யூல் ஃபில்டர்கள், ஃப்யூல் பம்புகள், இன்ஜெக்டர்கள், ரப்பர் ஹோஸ்கள் மற்றும் சீல்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கர்நாடக அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்துள்ளார்.

e20
e20reuters

இதற்கிடையே, கர்நாடக அரசின் இந்த ஆய்வு முடிவுகளை மறுத்துள்ளன பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலந்திருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் உரிய சோதனை அடைப்படையில் நடத்தப்பட்டதல்ல என்றும் பெட்ரோல் மாதிரிகளைச் சேகரிப்பதற்கும், அவற்றைப் பரிசோதிப்பதற்கும் குறிப்பிட்ட நடைமுறைகள் இருப்பதாகவும், கர்நாடக அரசு நடத்திய அக்டோபர் மாதப் பரிசோதனையில் அந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளன. தங்களது தரப்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கர்நாடகாவில் சேகரிக்கப்பட்ட 56 மாதிரிகள் உட்பட நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்குள் இருப்பதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கர்நாடக அரசுடன் இணைந்து வெளிப்படையான முறையில் மீண்டும் பரிசோதனை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளன. இவ்வாறு, பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பாகக் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளும், எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ள மறுப்பும் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

31% ethanol in petrol? Karnataka Govt study shocks motorists
குற்றப்பின்னணி உடையவர்கள் அமைச்சராக முடியாதா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?