பெங்களூரு | வரி ஏய்ப்பு செய்த 30 சொகுசு கார்கள் பறிமுதல் - போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
கர்நாடக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பெங்களூருவின் நகரச் சாலைகளில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையான வரி செலுத்தாமல் இயக்கியதற்காக 30 சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றில் ஃபெராரி, போர்ஷே, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், ஆடி, ஆஸ்டன் மார்டின் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து சுமார் ரூ.3 கோடி வரியை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துணை ஆணையர் சி. மல்லிகார்ஜுன் தலைமையிலான 41 அதிகாரிகள் குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே கர்நாடகாவில்தான் சாலை வரி மிகவும் அதிகமாக உள்ளது. வாகனத்தின் இருக்கை திறன், வாகன இயந்திரத்தின் கன அளவு, அதன் எரிபொருள் வகை, அதன் விலை மற்றும் எடை, அதன் பயன்பாட்டு நோக்கம் மற்றும் வாகனத்தின் ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வாகனத்திற்கான சாலை வரித் தொகையை மாநில அரசு தீர்மானிக்கிறது.
இது பயன்படுத்திய வாகனத்தை பதிவு செய்யும்போது அல்லது வேறு மாநிலத்திலிருந்து கர்நாடகாவிற்கு வாகனத்தை மாற்றும்போது கருத்தில் கொள்ளப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் விலை மற்றும் ஆண்டைப் பொறுத்து 13 முதல் 93 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு 4 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு இறுதியில், கர்நாடக அரசு வாகனப் பதிவுகளுக்கு கூடுதல் செஸ் வரியை அறிமுகப்படுத்தியிருந்தது. புதிதாக விதிக்கப்பட்ட செஸில் பதிவு செய்யும்போது இருசக்கர வாகனங்களுக்கு ரூ.500 மற்றும் கார்களுக்கு ரூ.1,000 கட்டணம் அடங்கும்.