பெங்களூரு: ஏரோ இந்தியா கண்காட்சிக்காக அசைவ உணவுகள் விற்பனைக்கு தடை!
பெங்களூரில் நடைபெற இருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சிக்காக ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17 வரை இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவுகளை விற்பதற்கு பிபிஎம்பி தடை விதித்துள்ளது.
பெங்களூர் யெலஹங்கா விமானப்படை நிலையத்தை சுற்றி 13 கிமீ சுற்றளவில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவகங்களை ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17 வரை மூடுமாறு புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி - Bruhat Bengaluru Mahanagara Palike) ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சியின் போது நடக்கும் பயிற்சி மற்றும் விமான சாகச நிகழ்வின் போது, விமானங்களில் பறவைகள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதிலொன்றாக, அப்பகுதியில் எவ்வித விலங்கும், பறவையும் கொல்லப்படக்கூடாது என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிபிஎம்பி தெரிவித்துள்ளது.
யெலஹங்கா மண்டலத்தின் இணை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஜனவரி 17 தேதி குறிப்பிட்ட பகுதியில் உள்ள இறைச்சி தொடர்பான அனைத்து நிறுவனங்களும் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17 வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது. மேலும் குறிப்பிடப்பட்ட இந்த காலகட்டத்தில் அசைவ உணவுகளை வழங்கவோ அல்லது விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் BBMP சட்டம் 2020 மற்றும் இந்திய விமான விதிகள் 1937, விதி 91 ஆகியவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று BBMP எச்சரித்துள்ளது. ஏரோ இந்தியா 2025, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வானது, அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களுடன் பல்வேறு இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களைக் காண்பிக்கும்.
இக்கண்காட்சியானது தொழில்நுட்ப வல்லுநர்கள், விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் தொடங்கி பொதுமக்களை வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.