“ஒட்டுக்கேட்கப்படும் போன்கள்” ஆப்பிள் அனுப்பிய குறுஞ்செய்திகளால் அதிர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக வந்த குறுஞ்செய்திகளை அடுத்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆளும் தரப்பு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
சசி தரூர், மஹூவா மொய்த்ரா
சசி தரூர், மஹூவா மொய்த்ராpt web

தங்கள் செல்போன்களை அரசு உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, காங்கிரஸ் தலைவர் பவன் கோரா உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்திகளை சுட்டிக்காட்டி தங்களது குற்றச்சாட்டுகளை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தி
ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தி

எதிர்க்கட்சி தலைவர்களான சசி தரூர், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் பிரியங்கா சதுர்வேதி, சமாஜ்வாதியைச் சேர்ந்த அகிலேஷ்யாதவ் மற்றும் ராகுல்காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் நான்கு நபர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இதுபோன்ற செய்திகள் ஒரே நேரத்தில் வந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். ‘அரசுதான் எங்களை ஒட்டுக்கேட்கிறது, வேவு பார்க்கிறது’ போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

இது குறித்து எம்.பி. மஹூவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில், “அரசு எனது செல்போனையும் மின்னஞ்சலையும் ஹேக் செய்ய முயல்வதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் வந்துள்ளது. உங்கள் பயம் என்னை பரிதாபப்பட வைக்கிறது” என தெரிவித்துள்ளார். பிரியங்கா சதுர்வேதியை டேக் செய்துள்ள அவர், ‘நீங்கள், நான் மற்றும் 3 இந்தியர்கள் இந்த குறுஞ்செய்தியை பெற்றுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசின் விளக்கம் என்ன என்பதை பார்த்துவிட்டு, அதன்பின் நீதிமன்ற நடவடிக்கைகளிலோ அல்லது பிற நடவடிக்கைகளிலோ எதிர்க்கட்சிகள் ஈடுபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராகுல்காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி, ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை குறிப்பிட்டு பேசினார். பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com