18-30 வயதுக்குட்பட்ட இத்தனை ஆயிரம் பெண்கள், சிறுமிகள் மாயம்! - ம.பி. சட்டசபையில் அதிர்ச்சி தகவல்
மத்தியப் பிரதேசத்தில் 23 ஆயிரத்திற்கும மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காணவில்லை என்று அம்மாநில அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயது வரையிலானவர்கள் என்றும், சுமார் 2 ஆயிரம் பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போபால், இந்தூர் உள்பட மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 500க்கு மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்தனை ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ள நிலையில் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் 292 பேர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 283 பேர் உட்பட பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களை நிகழ்த்திய சுமார் 1,500 குற்றவாளிகள் காவல்துறையால் பிடிக்கப்படாமல் இருப்பதாக அரசு கூறியுள்ளது.
இது பெண்கள் காணாமல் போயுள்ள பிரச்சினையின் தீவிரத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இதற்கு தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.