5 ஆண்டுகளில் 41,000 பெண்கள் மாயம்; பாலியல் தொழிலில் அதிகம் தள்ளப்பட்டார்களா?- குஜராத்தில் அதிர்ச்சி!

குஜராத்தில் கடந்த 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
gujarat womens missed
gujarat womens missedtwitter image

இந்திய மாநிலங்களில் ஒன்று, குஜராத். இது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும் ஆகும். இந்த மாநிலத்தில்தான் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு 7,105 பெண்களும், 2017ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019ஆம் ஆண்டு 9,268 பெண்களும் 2020ஆம் ஆண்டில் 8,290 பெண்களும் மாமாகி இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இவர்களின் மொத்த எண்ணிக்கை, 41,621 ஆக பதிவாகியிருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் தற்செயலாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் எங்கு இருக்கிறார்கள், எதற்காகக் கடத்தப்படுகிறார்கள், வேலைக்காகப் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்களா என்பது குறித்து அம்மாநிலத்துக்கே தகவல் தெரியவில்லை. ஆனால், இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சிலர், காணாமல்போன சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காகக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும், பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்திச் சென்று வெளிமாநிலங்களில் விற்கப்படுகிறார்கள் என்றும் கூறியிருப்பது பகீரைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா, “காணாமல் போன சில வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை நான் பார்த்துள்ளேன். இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறை தீவிரமாகக் கையாளவில்லை. இதனால் இப்பிரச்சினைக்கு முடிவில்லாமல் உள்ளது. சிறுமிகளையும், பெண்களையும் கடத்தி வேறு மாநிலத்தில் விபசாரத்திற்கு தள்ளுவதென்பது கொலை வழக்கைவிட மோசமானது. காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் என்றாவது மகள்கள் திரும்பி வருவார்கள் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். ஆகையால், இந்த வழக்குகளைக் கொலை வழக்குகளைப்போல தீவிரமாக விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி, “சிறுமிகள் காணாமல் போனதற்கு கடத்தப்படுவதுதான் காரணம். எனது பதவிக் காலத்தில், காணாமல் போன பெண்களில் பெரும்பாலோர் சட்டவிரோதமாக மனித கடத்தல் குழுக்களால் வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. கேடா மாவட்டத்தில் நான் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, அந்த மாவட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஏழைப் பெண்ணைத் கடத்திச் சென்று விற்றுவிட்டார். தீவிர நடவடிக்கைக்கு பிறகு அந்தப் பெண்ணை எங்களால் மீட்க முடிந்தது. ஆனால், அனைத்து வழக்குகளிலும் இப்படி ஒரு சந்தர்ப்பம் நிகழாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹிரென் பங்கர், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல் போனதைவிட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் உண்மையிலேயே 41 ஆயிரம் பெண்கள் மாயமாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com