தடம் புரண்ட 21 ரயில் பெட்டிகள்.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. உயிர்பலி இத்தனையா?
டெல்லியில் இருந்து கவுகாத்தி செல்லும் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலானது பீகார் மாநிலத்தில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றபோது தடம்புரண்டுள்ளது. 21 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், வெளிச்சம் இல்லாத பகுதி என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. விபத்தில் சிக்கியவர்களில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடும் இருள் சூழ்ந்திருந்ததால் விரைந்து வந்த அப்பகுதி மக்கள் செல்ஃபோன், டார்ச் போன்றவற்றை கொண்டும் மீட்பு பணியில் இறங்கியிருந்தனர். சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த இந்த ரயில் இரவு 10 மணியளவில் தடம்புரண்டதாகவும், உடனடியாக அங்கு வந்த அப்பகுதி மக்கள் பெரும் உதவிகளை செய்ததாகவும் உயிர் தப்பியவர்கள் பேட்டியளித்துள்ளனர்.
விடிய விடிய நடந்த மீட்புப்பணியைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு மற்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.