பட்ஜெட் 2026 | ரூ.15 லட்சம் வரை வருமான வரிவிலக்கு.. எதிர்பார்க்கும் சம்பளதாரர்கள்!
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் இடையே பெரிய அளவிலான வரிச் சலுகை குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதை 15 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசு 2026-27 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றங்களை, சம்பளதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் இடையே பெரிய அளவிலான வரிச் சலுகை குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ளன. பணவீக்க அழுத்தம், உயர்ந்து வரும் இ.எம்.ஐ (EMI) மற்றும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக, அரசாங்கம் தைரியமான வரி குறைப்புகளை அறிவிக்கும் என்று பலர் நம்புகின்றனர். குறிப்பாக, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், புதிய வரி முறையில் தற்போதுள்ள ரூபாய் 75 ஆயிரம் நிலையான கழிவுத் தொகையை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.25 லட்சம் வரை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதை 15 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், புதியவரி முறையிலும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கான வரிச் சலுகையை அறிமுகப்படுத்த வலியுறுத்தப்படுகிறது. புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்போருக்கும், வீட்டுக் கடனுக்கான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் பங்குச் சந்தையில் நீண்டகால மூலதன ஆதாய வரிவிலக்கு வரம்பை ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும், நிதி நிலை யதார்த்தங்கள் மற்றும் சமீபத்திய சீர்திருத்தங்கள் காரணமாக, அரசாங்கம் பெரிய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த சில பட்ஜெட்டுகளில், குறிப்பாக 'புதிய வரி முறை' மூலம் வருமான வரி கட்டமைப்பில் கணிசமான மாற்றங்களை மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. இதனால் அரசாங்கம் பெரிய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதற்குப் பதிலாக, வரி வரம்புகளில் சிறிய மாற்றங்கள் அல்லது நடைமுறை எளிமைப்படுத்தல்கள் மட்டுமே இருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
