
மணிப்பூர் வன்முறையின்போது, குக்கி இனப் பெண்கள் இருவர் மெய்டீஸ் சமூக கலவரக்காரர்களால் நிர்வாணமாக, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மே 4 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் 76 நாட்களுக்கு பிறகு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களால் அம்பலமானது. இந்நிலையில் அதேபோலான ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருப்பது, மீண்டும் அம்பலமாகியுள்ளது.
இரண்டு பெண்களுக்கு குற்றம் இழைக்கப்பட்ட அதே நாளில் தான் மற்றொரு கொடூரமான சம்பவமும் நடந்துள்ளது. அந்த பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் இது நடந்துள்ளது. இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கொனுங் மாமாங் பகுதியில் கார் கழுவும் இடத்தில் 21 வயது மற்றும் 24 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, 100 நபர்கள் அடங்கிய கலவர கும்பல் ஒன்று அவர்களை தாக்கியுள்ளது.
அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சக ஊழியர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், “கார் கழுவும் இடத்தில் இருந்த இரண்டு பெண்களையும், ஆண்கள் அதிகம் நிரம்பிய பெரிய குழு ஒன்று தாக்கியது. அந்த குழுவில் சில பெண்களும் இருந்தனர், கும்பலில் இருந்த அந்த பெண்கள் தான் பாதிக்கப்பட்ட பெண்களை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும்படி ஆண்களை ஊக்கப்படுத்தினர். சுமார் ஒன்றரை மணி நேர கொடூரத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள ஒரு மரத்தூள் ஆலைக்கு அருகே வீசப்பட்டனர். அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டது, அவர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் இருந்தன” என்று கூறியுள்ளார்.
மே 4ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பயந்து போய் யாரும் தொடக்கத்தில் புகார் கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் தாயார் 12 நாட்களுக்கு பிறகு மே 16ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த எஃப்ஐஆர்-ல். “அந்த தாயின் மகளும் உடனிருந்த மற்ற பெண்ணும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்கு பிறகு கொலை செய்யப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அந்த புகார் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொரொம்பட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அந்த எஃப்ஐஆர் நகலை என்டிடிவி பார்த்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களின் இறந்த உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும், அவர்கள் இருக்கும் இடமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய குழுவில் சுமார் 100-200 எண்ணிக்கையிலான நபர்கள் இருந்ததாகவும், இந்த குற்ற சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 125 பேர் கொல்லப்பட்டதாகவும், 40,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.