மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே கூறும்போது, “மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், நாளை இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணிவரை அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அலுவலகங்களும் நாளை முதல் 15 நாட்கள் மூடப்படும். அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் பங்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு முழு முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். போக்குவரத்தை பொருத்தவரையில் ரயில், பேருந்து சேவை தொடரும். அந்த சேவைகளை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மக்கள் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளலாம். ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்.” என்றார்.
மேலும், கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களை அருகாமை மாநிலங்கலிருந்து பெற மத்திய அரசிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் உதவி தேவை என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.