அகமதாபாத் விமான விபத்து | 133 பேரின் உடல்கள் இதுவரை மீட்பு.. விபத்தினை நேரில் கண்டவர் சொல்வதென்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விமானம் விபத்திற்குள்ளானதை அடுத்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலில் ரூபானி விஜய் ராம்னிக்லால் என்ற பெயர் உள்ளது. இவர் குஜராத்தின் 16 ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது...
விபத்து நடந்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்தி பயணிகளின் எண்ணிக்கையையும் அவர்களது நாடுகளின் விபரங்களையும் வெளியிட்டுள்ளது. ஏர் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.
அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் போர்த்துக்கீசிய நாட்டைச் சேர்ந்த 7 பேரும் இருந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் நாங்கள் அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என INDIAtv செய்தி வெளியிட்டுள்ளது. அதில் விமான விபத்தினை நேரில் கண்டவர் கூறுகையில், “நான் வீட்டில் இருந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று பார்க்க நாங்கள் வெளியே சென்றபோது, காற்றில் அடர்த்தியான புகை மண்டலம் இருந்தது. நாங்கள் இங்கு வந்தபோது, விபத்துக்குள்ளான விமானத்தின் குப்பைகள் மற்றும் சடலங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன” எனத் தெரிவித்துள்ளார்.