இந்த அறிகுறிகள் உடலில் வந்தால் உதாசீனம் செய்யாதீர்கள்; புற்றுநோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கடந்த ஆண்டு புற்றுநோயின் பாதிப்பு 14 லட்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?... பார்க்கலாம்...
புற்றுநோய்
புற்றுநோய்pt web

கட்டுப்பாடற்ற முறையில் உடலில் உள்ள செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் புற்றுநோய். இந்நோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்துவது போன்ற பல காரணங்களை உலக சுகாதார அமைப்பு பட்டியலிடுகிறது. இதில் 22 விழுக்காடு புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம் தான் என்கிறார் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் கோபு.

அவர் கூறுகையில், “எந்தப்பகுதியில் புற்றுநோய் ஏற்படுகிறதோ அதற்கேற்றார் போல் தான் அறிகுறிகள் தெரியும். இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று முக்கியமான புற்றுநோய்கள் இருக்கிறது. வாய்ப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.

வாய்ப்புற்றுநோய் பழக்கவழக்கத்தினால் வருகிறது. இளைஞர்கள் இளம்வயதிலேயே பான், குட்கா, புகையிலை, சிகரெட் போன்றவைகளை உபயோகப்படுத்துகின்றனர். இதன்காரணமாக இந்தியாவில் புற்றுநோய் இந்தியாவில் ஏற்படுவது அதிகமாகி வருகிறது. அதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மார்பகப்புற்று நோய் எந்த வயதினருக்கும் விதிவிலக்கானதல்ல. மார்பகங்களில் கட்டி போன்று இருப்பது, ரத்தம் வருதல் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. கணவரிடமோ பெற்றோரிடமோ எப்படிச் சொல்வது என கூச்சப்படாமல் விழிப்புணர்வோடு செயல்பட்டால் விரைவில் சரிபடுத்திவிடலாம்.

நோய் எந்தெந்த பகுதியை பாதிக்கின்றதோ அதற்கேற்றார் போல் தான் அறிகுறிகள் இருக்கும். பசி எடுக்கவில்லை என அதுகுறித்தான மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அது இரைப்பைப் புற்றுநோயாக இருக்கும். ஓரிரு மாதங்களில் அது வேறு பகுதிகளுக்கு பரவும் வாய்ப்பும் இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புற்றுநோய் கதிர்வீச்சுத்துறையின் தலைவர் மருத்துவர் விஜய ஸ்ரீ கூறுகையில், “இந்தியாவில் போன வருடம் மட்டும் 14 லட்சம் பேர் புற்றுநோய் இருப்பவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன்படி 9 பேரில் ஒருவருக்கும் புற்றுநோய் வருகிறது. இந்தியாவில் அதிகளவில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். 14 லட்சத்தில் 2 லட்சம் பேர் உத்திரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இதில் 5 ஆவது இடத்தில் இருக்கின்றது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் மக்கள் புற்றுநோய் இருப்பவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டங்களிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தோம் என்றால் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் 80% உள்ளன” என தெரிவித்தார்.

இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் மட்டும் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு 2 லட்சம் புற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 82 ஆயிரம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை நோயாளிகளிடம் பார்க்க முடிகிறது என நம்பிக்கை தெரிவிக்கிறார் மருத்துவர் கண்ணன்.

அவர் கூறுகையில், “மருத்துவப் புற்றுநோயியல் துறையில், நாளொன்றுக்கு 8 முதல் 9 பேர் வரையிலும் வருடத்திற்கு 2200 புதிய நோயாளிகளை பதிவு செய்கிறோம். புற்றுநோய் மருத்துவத்தில் ரேடியேசன், அறுவை சிகிச்சை, மருத்துவம் சார்ந்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் மருத்துவம் சார்ந்து புற்றுநோயை குணப்படுத்துகிறோம்.

ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்ட பின் மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களும் நோயாளிக்கு என்ன சிகிச்சை கொடுக்கலாம் என ஆலோசனை செய்வோம். இங்கு அனைத்துவிதமாக புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. இதற்கு முன்பெல்லாம் நோயாளிகள் நோய் தீவிரமான பின்பு தான் கண்டறியப்படுவார்கள், ஆனால் இப்போது ஆரம்ப கட்டங்களிலேயே எங்களிடம் சிகிச்சைகாக வருகின்றனர். மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதிகமானோரை குணப்படுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

உடலில் ஏற்படும் சிறு சிறு கட்டிகள், அசாதாரண சமிக்கைகள் ஆகியவற்றை உதாசீனப்படுத்தாமல் மருத்துவர்களை விரைவாக அணுக வேண்டும் எனவும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளை ஆண்டுக்கொரு முறை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com