சிறுநீரக பாதிப்பு
சிறுநீரக பாதிப்பு முகநூல்

இந்தியாவில் அதிகரிக்கும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை! ஆய்வு சொல்லும் எச்சரிக்கை!

15 வயதுக்கு மேற்பட்டோரில் இத்தகைய பாதிப்புகள் அதிகரிப்பதால், உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியிருக்கிறது சிறுநீரக நோய்கள்.
Published on

இந்தியாவில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோரில் இத்தகைய பாதிப்புகள் அதிகரிப்பதால், உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியிருக்கிறது சிறுநீரக நோய்கள்.

Nephrology Journal வெளியிட்டுள்ள ஆய்வு தரவுகளின்படி, இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 13.24 % பேருக்கு சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

2011-2017 இடையேயான காலகட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 11.12 % ஆக இருந்த நிலையில், 2018 முதல் 2023 வரையிலான கால கட்டத்தில் இந்த எண்ணிக்கை 16.38 % ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் 15.34% ஆகவும், நகர்ப்புற பகுதிகளில் இந்த எண்ணிக்கை 10.65% ஆகவும் இருக்கிறது. ஆண்களில் 14.80% பேரும், பெண்களில் 13.51% பேர்களிடமும் சிறுநீரக பாதிப்புகள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 14.78% ஆக உள்ளது. 10 லட்சம் பேரில் 700 முதல் 800 பேருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில், இவர்களில் இரு சிறுநீரகங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 முதல் 200 வரை இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எதனால் இந்த எண்ணிக்கை அதிகமாகிறது என்பதற்கு நீரிழிவு நோயையே காரணமாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள். நீரிழிவு நோயாளிகள், தங்களின் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தொடக்கத்திலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெற முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் இருசிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் 2 லட்சம் முதல் இரண்டேகால் லட்சம் புதிய நோயாளிகள் அதிகரிப்பதாக கூறுகிறார்கள் மருத்துவர்கள். ஆனால், டயாலிசிஸ் வசதிகளை பொறுத்தவரை நாட்டில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கே உள்ளது.

சிறுநீரக பாதிப்பு
பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் ஆபத்து! ’இதயநோய்-க்கு வழிவகுக்கும்’ - பகீர் தகவல்

அதிலும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு எளிதாக மருத்துவ வசதிகள் கிடைக்கும் நிலையில், பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு இந்த வசதிகள் கிடைப்பதும் சிரமமாகவே இருக்கிறது. மருத்துவர் கூறியது போல தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே டயாலிசிஸ் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பது, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, புகைப்பிடித்தல், மதுப்பழக்கங்களை தவிர்ப்பது போன்றவற்றால் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.நமது உடலின் ஆரோக்கியத்தை காக்க, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com