நீங்கள் சாப்பிடும் உணவை பொறுத்தே உங்கள் முடியின் ஆரோக்கியம் இருக்கிறது.. எப்படி தெரியுமா?
உங்கள் உணவில் சேர்க்கப்படும் உணவுகளே உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஷாம்புகள், சீரம்கள் மற்றும் எண்ணெய்கள் உங்கள் முடியின் தோற்றத்தை தற்காலிகமாக அழகாக வைத்திருக்கும். ஆனால், ஆரோக்கியமான கூந்தலுக்கான அடித்தளம் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பொறுத்தே அமைகிறது. உங்கள் உடல் ஆரோக்கியமானது நீங்கள் உண்ணும் உணவை பொறுத்தே அமைகிறது.. நீங்கள் சாப்பிடுவது முடியின் வளர்ச்சி மற்றும் அதன் அமைப்பை நேரடியாக பாதிக்கிறது. உணவு என்பது முடி ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது என்று தோல் மருத்துவர் பிரவீன் பனோத்கர், கூறுகிறார். முடியின் ஆரோக்கியம் குறித்து அவர் என்னென்ன? சொல்லுகிறார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
முடி கெரட்டினால் ஆனது, இது முடியின் எலும்புக்கூட்டை உருவாக்கும் அமினோ அமிலங்களின் கலவையாகும். உங்கள் உணவில் போதுமான புரதம் இல்லாமல் இருந்தால் , முடி வளர்ச்சி குறையும், மேலும் அதன் இழைகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறக்கூடும். இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை முடி நுண்ணறைகளை ஊட்டமளிப்பதற்கும் முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும். குறிப்பாக பெண்களில், இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு முடி மெலிவதற்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்றார் மருத்துவர்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், முடி சப்ளிமெண்ட்களில் விற்பனை செய்யப்படும் பயோட்டின் (வைட்டமின் பி7), கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது, ஆனால் இதன் நன்மைகள் பெரும்பாலும் குறைபாடு உள்ளவர்களிடமே காணப்படுகின்றன. பி12 மற்றும் நியாசின் போன்ற பிற பி வைட்டமின்கள், உச்சந்தலைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகின்றன. ஆரோக்கியமான நுண்ணறை செயல்பாட்டை உறுதி செய்கின்றன. சால்மன், சியா விதைகள் மற்றும் வால்நட்ஸ் போன்ற உணவுகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் முடி உதிர்வை குறைத்து அதன் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.
மேலும் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இது முடி உதிர்தல் அல்லது மந்தமான மற்றும் உயிரற்ற முடியாக மாற்றும் என்கிறார் மருத்துவர்.
உங்களின் முடி அடர்த்தியாக்வும் அழகாகவும் வளர முழு உணவுகள், மெலிந்த புரதங்கள், கீரைகள், பழங்கள், நட்ஸ் வகைகள் , விதைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த ஒரு சமச்சீர் உணவை சாப்பிடுவது முக்கியம் என்று மருத்துவர் கூறுகிறார். காரணம் அப்போதுதான் உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மட்டுமல்லாமல், வலிமை, பளபளப்பு மற்றும் உயிர்ச்சக்தியையும் பெற முடியும் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.