கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தா?
கர்ப்ப காலத்தில் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்வது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 46 ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பாரசிட்டமால் மருந்து, நஞ்சுக் கொடிவழியாக கருவில் உள்ள குழந்தையை அடைந்து, மூளையின் வளர்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆட்டிசம் மற்றும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே பாரசிட்டமாலை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பராசிட்டமால் நஞ்சுக்கொடியை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டலாம், ஹார்மோன்களை சீர்குலைக்கலாம் மற்றும் கருவின் மூளை வளர்ச்சியில் கோளாறை ஏற்படுத்தலாம். எபிஜெனெடிக் (மரபணு நடத்தை காணக்கூடிய பண்புகளை ஏற்படுத்தும்) மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது , குழந்தைகளுக்கு ஆட்டிசம் மற்றும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. மருந்தகத்தில் கிடைக்கும் பாராசிட்டமால் 'அசிடமினோஃபென்' என்றும் அழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் வலியை நிர்வகிக்க பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து அமெரிக்காவின் மவுண்ட் சினாயில் உள்ள இகான் மருத்துவப் பள்ளியில் மக்கள்தொகை சுகாதார அறிவியல் மற்றும் கொள்கை, சுற்றுச்சூழல் மருத்துவம் மற்றும் காலநிலை அறிவியல் உதவிப் பேராசிரியர் டிடியர் பிராடா கூறுகையில் "உயர்தர ஆய்வுகள் மகப்பேறுக்கு முந்தைய அசிட்டமினோஃபென் வெளிப்பாடு மற்றும் ஆட்டிசம் மற்றும் ADHD இன் அதிகரித்த அபாயங்களுக்கு இடையேயான தொடர்பைக் காட்ட அதிக வாய்ப்புள்ளது" என்றார்.
இந்த ஆய்வறிக்கை அசிடமினோபன் பயன்பாட்டிற்கும் இந்த கோளாறுகளுக்கும் இடையிலான தொடர்பை விளக்கக்கூடிய உயிரியல் வழிமுறைகளையும் ஆராய்கிறது. உலகம் முழுவதும் ஆட்டிசம் மற்றும் ADHD வழக்குகள் அதிகரித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த கண்டுபிடிப்புகள் பொது சுகாதாரக் கொள்கை, மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் நோயாளி கல்வி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
ஆய்வில் பாராசிட்டமால் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்று காட்டவில்லை என்றாலும், ஆய்வின் சான்றுகள் தொடர்பை வலுப்படுத்துகின்றன மற்றும் தற்போதைய மருத்துவ நடைமுறைகள் குறித்த கவலைகளை எழுப்புகின்றன என்றும் தெரிவித்தார்.
அதனால் கர்ப்பிணிப் பெண்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை எச்சரிக்கையுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவ ஆசிரியர்கள் பரிந்துரைத்தனர். மேலும் அவர்களின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்தனர்.