குழந்தைகள் கணித பாடத்தில் சிரமப்படுகிறார்களா? காரணம் இதுதான்.. ஆய்வில் வெளிவந்த தகவல்!
கணிதத்தில் சிரமப்படும் குழந்தைகளின் மூளை செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, கணக்குகளைத் தீர்க்க சரியான முறையைத் தேர்ந்தெடுக்கவும், புதிய முறைக்கு மாறவும் சிரமம் ஏற்படுகிறது என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
கணிதத்தில் சில குழந்தைகள் எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் மற்ற குழந்தைகளைப் போல எளிதாகக் கணக்குகளைப் போட முடியாமல் தவிக்கின்றனர்.
சில குழந்தைகள் கணிதப் பாடத்தில் தொடர்ந்து சிரமப்படுவதற்கு, அவர்களின் மூளை செயல்படும் விதத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, கணக்குகளைத் தீர்க்கும்போது சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதிலும், ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு மாறுவதிலும் சில குழந்தைகளுக்குச் சிரமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கணக்கில் சில குழந்தைகள் ஏன் சிரமப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு 8 முதல் 10 வயதுக்குட்பட்ட 68 குழந்தைகளை உட்படுத்தினர். இதில் கணிதத்தைக் கையாள்வதில் தொடர்ந்து சிரமப்படும் Developmental Dyscalculia என்ற குறைபாடு கொண்ட குழந்தைகளும் இடம்பெற்றனர்.
கணக்குகளைத் தீர்க்கும்போது குழந்தைகள் எந்த முறையைப் பயன்படுத்துகின்றனர், எவ்வளவு விரைவாகப் புதிய முறைக்கு மாறுகின்றனர், அவர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த ஆய்வில் கண்காணித்தனர்.
இதில், கணிதச் சிரமம் உள்ள குழந்தைகள் கணக்குகளைத் தீர்க்க வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் சிரமப்படுவது தெரியவந்தது. குறிப்பாக, ஒரு கணக்கின் கடினத்தன்மை மாறும்போது அதற்கேற்ற புதிய முறையைத் தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டனர்.
மேலும், இந்தக் குழந்தைகளின் மூளைச் செயல்பாட்டிலும் மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபாடுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். கவனம் செலுத்துதல், நினைவாற்றல் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தனையை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள் JNeurosci என்ற இதழில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின் முக்கியமான முடிவு என்னவென்றால், Developmental Dyscalculia என்ற கணிதக் குறைபாடு அனைத்து குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு மனச் செயல்பாடுகள் தொடர்பான சிரமங்கள் இருக்கலாம். குறிப்பாக, பல்வேறு மூளைச் செயல்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதில் ஏற்படும் வேறுபாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் லாஸ்னிக் கூறுகையில், இந்த ஆய்வு கணிதக் குறைபாடு கொண்ட குழந்தைகளிடையே தனித்தனியான வேறுபாடுகள் இருப்பதை காட்டுகிறது. மேலும், இந்தக் குறைபாடு மூளையின் சிந்தனைத் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளில் உள்ள பல்வேறு மாற்றங்களுடன் தொடர்புடையது என்றார்.

