சாதா முட்டை X பிரீமியம் முட்டை: எதில் சத்து? உண்மை என்ன?
சந்தையில் சாதாரண வெள்ளை முட்டைகளைத் தவிர்த்து, ஒமேகா-3, வைட்டமின் D3 செறிவூட்டப்பட்ட முட்டைகள், ஃப்ரீ- ரேஞ்ச் மற்றும் நாட்டு முட்டைகள் எனப் பல்வேறு வகையான முட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. சாதாரண முட்டை ஒன்று 6 ரூபாய் முதல் ஏழரை ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சிறப்பு வகை பிரீமியம் முட்டைகள் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
ஒரு சாதாரண முட்டையில் சுமார் 6 முதல் 7 கிராம் புரதச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. கோழிகளுக்கு வழங்கப்படும் சிறப்புத் தீவனங்கள் மூலம் மட்டுமே ஒமேகா-3, வைட்டமின் E போன்ற குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளை முட்டையில் சற்று அதிகரிக்க முடியும். இருப்பினும், 6 ரூபாய் மதிப்புள்ள சாதாரண முட்டையைவிட 30 ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் முட்டை ஐந்து மடங்கு அதிக சத்துகளைக் கொண்டது அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். மேலும், முட்டை ஓட்டின் நிறம் அதன் ஊட்டச்சத்து மதிப்பைப் பாதிப்பதில்லை.
மஞ்சள்கருவின் அடர் நிறம் கோழிகளுக்குத் தரப்படும் கரோட்டினாய்டு தீவனத்தால் ஏற்படுவதே தவிர, அது அதிக ஊட்டச்சத்தின் அடையாளம் அல்ல. முட்டையின் அளவு மட்டுமே அதில் உள்ள புரதத்தின் அளவை உயர்த்தும். எனவே, அதிக விலை கொடுத்து வாங்கும் பிரீமியம் முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துகளின் விபரங்களை லேபிள்களைப் பார்த்துச் சரியாக வாங்குவதே நுகர்வோருக்குச் சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

