போதுமான நேரம் தூங்கியும் சோர்வு நீடிக்கிறதா? புதிய வகை பிரச்னையை எடுத்துக்கூறும் ஆய்வு
போதுமான நேரம் தூங்கியும் சோர்வு நீடிக்கிறதா? காலையில் எழுவதற்குச் சிரமம், பகலில் அதிக தூக்கம், எதிலும் ஆர்வமின்மை போன்றவை புதிய வகை மனச்சோர்வின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது தொடர்பாக இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
போதுமான நேரம் தூங்கினாலும், பகலில் அதிகப்படியான தூக்கம், காலையில் எழுவதில் சிரமம் மற்றும் கடுமையான சோர்வு இருக்கிறதா? இது வெறும் சாதாரண தூக்கப் பிரச்சினை மட்டுமல்ல.. நமது உடலின் இயற்கையான கடிகாரமான சர்க்காடியன் (Circadian) சுழற்சியில் ஏற்படும் கோளாறுகளால் ஏற்படும் புதிய வகை மன அழுத்தமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 'தி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி (psychiatry) மருத்துவ இதழில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு பேருக்கு அதாவது 23 சதவிகிதத்தினருக்கு இந்த புதிய வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரவில் தாமதமாகத் தூங்குவது, காலையில் எழுந்திருக்க முடியாமல் தவிப்பது, மன அழுத்தத்தின்போது வழக்கத்தை விட அதிகமாகத் தூங்குவது போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. குறிப்பாக, இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, சராசரியாக 19 வயதிலேயே மன அழுத்த அறிகுறிகள் தொடங்கிவிடுகின்றன. இவர்களுக்குக் கடுமையான மன உளைச்சல், தற்கொலை எண்ணங்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் அதிகமாகவே ஏற்படுகின்றன.
வழக்கமாக மன அழுத்தத்திற்குக் கொடுக்கப்படும் மாத்திரைகள் இந்த புதிய வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு முழுமையான பலனைத் தராது என்றும், சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது. தொடர்ந்து சோகம், எதிலுமே ஆர்வமின்மை மற்றும் தூக்கக் கோளாறுகள் இருந்தால், அதைச் சாதாரண சோர்வு என்று நினைக்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகிப் பரிசோதிப்பது மிகவும் அவசியம் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு உரைக்கின்றன.

