புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் புதிய தடுப்பூசி.. மருத்துவ ஆய்வில் ஒரு புதிய மைல்கல்!!
புற்றுநோய் மீண்டும் வருவதையும் அது, பிற உறுப்புகளுக்குப் பரவுவதையும் பெருமளவில் கட்டுப்படுத்தும் உலகின் முதல் ‘தனிநபர் புற்றுநோய் தடுப்பூசி’ மருத்துவ ஆய்வில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மெர்க் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘இன்டிஸ்மேரன்’ என்ற இந்தத் தடுப்பூசி, புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நோயாளியின் புற்றுநோய் செல்லிலும் உள்ள குறிப்பிட்ட புரதங்களை அடையாளம் கண்டு, 'mRNA' தொழில்நுட்பம் மூலம் இத்தடுப்பூசி பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.
இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குப் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் நினைவாற்றலை வழங்குவதாக கூறுகின்றனர். பிரபல 'கீத்ருடா' மருந்துடன் இணைந்து வழங்கப்படுகையில், இது தோல் புற்றுநோய் மீண்டும் வந்து ஏற்படும் இறப்பு அபாயத்தை 49 சதவீதமாகவும், பிற உறுப்புகளுக்குப் பரவுவதால் ஏற்படும் இறப்பை 59 சதவீதமாகவும் குறைக்கிறது என இதன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 'mRNA' தொழில்நுட்பத்தை மற்ற வகை புற்றுநோய்களுக்கும் விரிவாக்க முடியும் என்பது புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

