காய்கறிகள் பழங்களை எப்படி கழுவ வேண்டும் தெரியுமா? | Guide to clean Vegetables
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல காய்கறிகள், பழங்கள் கடைகளில் பார்ப்பதற்கு ஃப்ரெஷாக இருந்தாலும், அதில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நிறைய இருக்கும்.
இந்த கிருமிகள் சமையலின் கொதிநிலையில், இறந்துவிடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும் நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர் அவற்றை உபயோகிப்பதே ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது என்று கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆனால் அதை கழுவதிலும் சில கவனம் தேவைப்படுகிறது. அவை என்னென்ன? பார்க்கலாம்...
காய்கறிகள், பழங்களை கழுவுவது எப்படி?
காய்கறிகளையும் பழங்களையும் பாத்திரத்தில் கழுவுவதை விட, ஓடும் நீரில் கழுவுவது சிறந்தது. ஓடும் நீரிலேயே கிருமிகள் எளிதில் சென்றுவிடும்.
சாதாரண நீரைவிடவும் வெந்நீரில் கழுவுவது சிறந்தது.
இப்படி கழுவிய பின்னர் துடைத்தபின், சேமித்து வைக்கலாம். ஈரத்தோடு வைக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் அதிகளவில் பெருகுவதற்கு வாய்ப்புண்டு.
கீரை வகைகளை சுத்தம் செய்யும்போது உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் அலசலாம்.
கேரட், வெள்ளரி, ஆப்பிள் போன்றவற்றை தோலுரித்து சாப்பிடக்கூடாது. தோலிலும் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், தோலை தூக்கி வீசுவது சத்துக்களை தூக்கி எரிவதற்கு சமம். தோலை வெந்நீரிலோ குளிர்ந்த நீரிலோ நன்கு அலசி, பின் சாப்பிட வேண்டும்.
பலர் சோப்பு தண்ணீர், வினிகர், எலுமிச்சை சாறு போன்ற பொருட்களை பயன்படுத்தி காய்கறிகளை சுத்தம் செய்கின்றனர். ஆனால் அது சரியான முறை இல்லை என்றும், இதற்கு மாறாக, எலக்ட்ரோலைட் வாட்டர் அல்லது பேக்கிங் சோடா போன்றவை பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்ற காய்கறிகளை போல காளான்களை கழுவக்கூடாது. ஏனெனில் நேரடியாக தண்ணீரில் கழுவது அவற்றை சுத்தம் செய்வதை கடினமாக்குகிறது. எனவே, ஈரமான துணியால் துடைப்பதே சிறந்த வழி.
தடிமனான தோல்களைக் கொண்ட காய்கறிகளையும் பழங்களையும் அதற்கென உள்ள ஸ்கரப்பர்களை பயன்படுத்தி துடைப்பது நல்லது.
காலிஃபிளவரை ஊற வைக்கப் பயன்படும் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொள்வது இந்தியப் பழக்கம்; இந்த இரண்டு பொருட்களும் ஒரு பயனுள்ள ஆண்டிமைக்ரோபியல் விளைவைக் கொண்டுள்ளன.
ஆப்பிள், வெள்ளரி போன்றவற்றின் பேற்பரப்பில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும்,பாதுகாக்கும் வகையிலும் மேற்பரப்பில் மெழுகுப்பொருளின் அடுக்குகள் இருக்கும். ஆகவே இதை வெந்நீரில் கழிவ வேண்டும். அப்படி செய்தால் மேற்பூச்சு நீங்கிவிடும்.
காய்கறிகளை உப்பு நீரில் கழுவுவதும் சிறந்தது. 98 சதவீதம் நீர், 2 சதவீதம் உப்பு கலந்து 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு கழுவி பயன்படுத்த வேண்டும். சேமிக்க நினைப்பவர்கள், நல்ல துணியால் அதை துடைத்துவிட்டு சேமிக்கவேண்டும். இதன் மூலம் காய்கறிகளில் படிந்திருக்கும் 80 சதவீத பூச்சிக்கொல்லிகள் நீங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எத்தகைய முறையை பயன்படுத்தி கழுவினாலும் இறுதியில் சுத்தமான ஈரப்பதமுடைய துணியில் துடைத்தெடுக்க வேண்டும்.