obesity
obesity AI generated image

உடல்பருமன்| நோயாளிகளாக மாறுகிறதா இளைய தலைமுறை..? 2026-ன் அதிர்ச்சி ரிப்போர்ட்!

குழந்தை பருவ உடல் பருமனில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, 4 கோடியே 13 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவிற்கு கவலையளிக்கும் எதிர்கால தலைமுறையினர் குறித்த எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது
Published on

சமீபத்தில் வெளியான 'உலக உடற்பருமன் வரைபடம் 2026' (World Obesity Atlas 2026) அறிக்கையின்படி, அதிக எடை மற்றும் உடற்பருமன் கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கையில், உலக உடற்பருமன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை இந்தியாவின் எதிர்கால ஆரோக்கியம் குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை முன்வைக்கிறது.

2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4 கோடியே 13 லட்சம் குழந்தைகள் அதிக எடை அல்லது உடற்பருமனுடன் (Overweight or Obese) வாழ்ந்து வருகின்றனர். இதில் 5 முதல் 9 வயதுடைய சிறுவர்கள் 1 கோடியே 49 லட்சம் பேரும், 10 முதல் 19 வயதுடைய பதின்ம வயதினர் 2 கோடியே 64 லட்சம் பேரும் அடங்குவர். உலக அளவில் சராசரியாக ஐந்தில் ஒரு குழந்தை இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்தியாவில் இந்த பாதிப்பு ஆண்டுக்குச் சராசரியாக 5% என்ற வேகத்தில் அதிகரித்து வருவது மருத்துவ வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Junk food
Junk food web

இந்த உடல்நலப் பாதிப்பு என்பது வெறும் எடை அதிகரிப்போடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இப்போதே இதற்கு முறையான தீர்வு காணாவிட்டால், வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் நம் நாட்டின் ஒரு தலைமுறையே நாட்பட்ட நோயாளிகளாக மாறும் அபாயம் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

obesity
இரவில் தூக்கமின்மையா? 10 நிமிடங்களில் தூங்கவைக்கும் புதிய உத்தி!

குறிப்பாக, உடல் நிறை குறியீட்டெண் எனப்படும் பி.எம்.ஐ (BMI) அதிகரிப்பால் 2040-க்குள் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கவனித்தால், சுமார் 1 கோடியே 18 லட்சம் பேருக்குக் கல்லீரல் பாதிப்பு எனப்படும் எம்.ஏ.எஸ்.எல்.டி (MASLD) ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயர் இரத்த அழுத்தம் எனப்படும் ஹைப்பர் டென்ஷன் (Hypertension) சுமார் 42 லட்சம் சிறுவர்களையும், இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பு அல்லது ஹைப்பர் கிளைசீமியா (Hyperglycaemia) சுமார் 20 லட்சம் பேரையும் தாக்க வாய்ப்புள்ளது. மேலும், இதய நோய்களுக்கு முக்கியக் காரணமான ட்ரைகிளிசரைடு (High Triglycerides) பாதிப்பு 60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு ஏற்படலாம் எனத் தரவுகள் எச்சரிக்கின்றன.

obesity
obesity web

இந்த நெருக்கடிக்குக் குழந்தைகளின் வாழ்வியல் சூழலே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் 11 முதல் 17 வயதுடையவர்களில் 74 சதவீதம் பேர் போதிய உடல் உழைப்பு (Physical Activity) இல்லாமல் இருக்கின்றனர். மேலும், 6 முதல் 10 வயதுடைய குழந்தைகள் தினமும் அதிக அளவில் சர்க்கரை பானங்களை உட்கொள்வதும், 35.5 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே முறையான பள்ளி உணவு கிடைப்பதும் இந்தச் சிக்கலைத் தீவிரப்படுத்துகின்றன.

obesity
மக்களே உஷார்| வெப்பம் சார்ந்த நோய்கள்.. சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்!

இதனுடன் தாய்மார்களின் ஆரோக்கியமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது..15 முதல் 49 வயதுடைய பெண்களில் 13.4 சதவீதம் பேர் அதிக பி.எம்.ஐ கொண்டுள்ளனர். மேலும், 32.6 சதவீதக் குழந்தைகளுக்குப் போதுமான தாய்ப்பால் (Sub-optimal Breastfeeding) கிடைக்காததும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

soft drinks
soft drinks web

இது குறித்து உலக உடற்பருமன் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஜொஹானா ரால்ஸ்டன் (Johanna Ralston) கூறுகையில், குழந்தைகளைப் பாதிக்கும் இந்த நோயைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள நாம் தவறிவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்வாக, சர்க்கரை பானங்களுக்கு வரி விதித்தல் (Sugar Tax), பள்ளிச் சூழலில் சத்தான உணவை உறுதி செய்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற அவசரக் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தச் சவாலை இப்போதே சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறினால், அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதே இந்த அறிக்கையின் ஒட்டுமொத்த எச்சரிக்கையாக இருக்கிறது.

obesity
ஜிம் செல்பவரா நீங்கள்..? இதயப் பரிசோதனை அவசியம்.. மருத்துவர்கள் அறிவுரை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com