குழந்தைப்பேறின்மைக்கு காரணமாகும் மது மற்றும் புகைப்பழக்கங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்
குழந்தைப்பேறின்மை பிரச்சினை மிகவும் அதிகரித்து செயற்கை கருத்தரிப்பு மையங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடையே உள்ள மது மற்றும் புகைப்பழக்கமும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைப்பேறின்மைக்கு வயது, பரம்பரை, மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சினைகள் தவிர மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கமும் ஒரு காரணமாக உள்ளதாக மும்பையை சேர்ந்த பிரபல மருத்துவர் அனுஜா தாமஸ் தெரிவித்துள்ளார். மது மற்றும் புகைப்பழக்கத்தால் கருச்சிதைவு, கருக்குழாய் கர்ப்பம் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் மரபணு குறைபாடு ஏற்பட்டு குழந்தைக்கு பிறப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அனுஜா தாமஸ் எச்சரித்துள்ளார்.
சிலர் குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும்போது மட்டும் மது, புகை பழக்கத்தை நிறுத்திவைத்தால் போதும் என கருதுவதாகவும் அது தவறு என்றும் மருத்துவர் அனுஜா தாமஸ் கூறியுள்ளார். மது, புகை பழக்கத்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவதுடன் அவற்றின் வீரியத்தையும் குறைப்பதாகவும் நேஹா திரிபாதி என்ற செயற்கை கருத்தரிப்பு நிபுணர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு மது, புகை பழக்கத்தால் ஹார்மோன்கள் பிரச்சினை ஏற்பட்டு குழந்தைப்பேறு ஏற்படாத நிலை வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் மது, புகை பழக்கத்தால் கருமுட்டை இழப்பு துரிதமாக நடைபெறுதாகவும் கருப்பையை கடினப்படுத்தி செயற்கை கருத்தரிப்புக்கு கூட வழி இல்லாத நிலையை ஏற்படுத்தி விடுவதாகவும் மஞ்சு குப்தா கூறியுள்ளார். நேரடியாக புகை பிடிப்பது தவிர அதை அருகிலிருந்து சுவாசிப்பதும் கூட அதே அளவு பாதிப்புகளை தரும் என இவர் எச்சரித்துள்ளார்.