ஜிம் செல்பவரா நீங்கள்..? இதயப் பரிசோதனை அவசியம்.. மருத்துவர்கள் அறிவுரை!
இளைஞர்களிடையே திடீர் மரணங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, டாக்டர் சண்முகசுந்தரம் இதய பரிசோதனை அவசியம் என அறிவுறுத்துகிறார். 20-25 வயதினருக்கு இதய ஆரோக்கியம் பரிசோதிக்காமல் கடின உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது.
இளைஞர்களிடையே அதிகரித்துவரும் திடீர் மரணங்கள் குறித்து இதய நிபுணர் டாக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 20 முதல் 25 வயதுடைய இளைஞர்கள், தங்களது இதய ஆரோக்கியத்தைப் பரிசோதிக்காமல் தன்னிச்சையாகக் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே இந்தத் திடீர் மரணங்களுக்கு முக்கியக் காரணமாகிறது என்கிறார் டாக்டர் சண்முகசுந்தரம்.
உலக அளவில் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலை நாடுகளை விட இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, வயிறு பகுதியில் மட்டும் கொழுப்பு சேருவது இருதய பாதிப்பைத் தூண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிதமான உடற்பயிற்சி, தினசரி 7 மணி நேர உறக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். மட்டன், சிக்கன் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம், ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். 20 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதுடன், கடினமான உடற்பயிற்சிக்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

