செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்கள்.. கண்டறிவது எப்படி?
பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, சில வழிமுறைகளை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மாம்பழத்தின் காம்புக்கு அருகில் பச்சைத் திட்டுக்களுடன் மஞ்சள் நிறத்தில் இருப்பது, சீரற்ற முறையில் பழுத்திருப்பது, தொடுவதற்கு கடினமாக இருப்பது ஆகியவை, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
முலாம்பழம் தொடுவதற்கு கடினமாகவும், அதேவேளையில் சீரான மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். தர்பூசணியை பொறுத்தவரை, அதன் சதைப்பகுதி சீரற்ற நிறத்திலிருப்பது, குறைந்த சுவை கொண்டதாக இருப்பது, கடினமான தன்மையுடன் இருப்பது ஆகியவை, அது இயற்கையாக பழுத்ததல்ல என்பதைஉணர்த்துவதாக இருக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்டால், அதனால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம் என எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள், பழங்களை நிறத்தை பார்த்து மட்டும் வாங்காமல், அதன் இயற்கையான வாசனை, மென்மை உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.

