Health tips | மழைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்னைகள் என்னென்ன? தடுக்க என்ன வழிகள்?
சமீபத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. பொதுவாகவே மழைக்காலங்களில் சளி, இருமல், காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா, டைஃபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் ஏ & ஈ உள்ளிட்ட பிரச்னைகளும் அதிகரிக்க தொடங்கும்.
இவற்றுடன் தோல் நோய்கள் பூஞ்சை தொற்று முதல் பாக்டீரியா வெடிப்பு என குறிப்பாக, சரும பிரச்னைகள் அதிகரிக்க தொடங்கும். இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி? பார்க்கலாம்..
வறண்ட சருமம்
மற்ற பருவக்காலங்களை காட்டிலும் மழைக்காலத்தில் மிகுந்த சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் முக்கியமான ஒரு சரும பிரச்னை, வறண்ட சருமம். இந்த பிரச்னை ஆஸ்துமா போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும்.
இப்படியான சூழலில், சூடான நீரில் குளிப்பது சருமத்தை மேலும் வறண்டதாக்கி விடும். எனவே மிதமான வெந்நீரில் குளித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரையும் பயன்படுத்த வேண்டும்.
பூஞ்சை தொற்றுக்கள்!
மழைக்காலங்களில் அதிகளவு ஈரப்பதத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்பட்சத்தில், எளிமையாக பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, டெர்மடோஃபைட்கள் மற்றும் கேண்டிடா போன்ற பூஞ்சை தொற்றுகள் அதிகமாக பரவும். இந்த தொற்றுக்கள் சருமத்தில் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல், அசெளகரியம் போன்றவை ஏற்படுலாம்.
குறிப்பாக பிறப்புறுப்புகள், கால் விரல் இடுக்குகள், அக்குள்களில் இந்த தொற்று ஏற்படுவது அதிகம். இதை தவிர்க்க இத்தகைய காலங்களில் ஈராமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உலர வைத்து ஆடைகளை அணியவேண்டும்.
பொடுகு தொல்லை
மழைக்காலங்களில் பொடுகு தலைமுடிகளில் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. தேங்காய் எண்ணெயை அதிகமாக தேய்ப்பது இந்த பொடுகை மேலும், தீவிரப்படுத்தலாம். எனவே, வாரத்தில் மூன்று முறை தலைக்கு குளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். தலைக்கு குளித்தபின், தலையை நன்கு உலர வைப்பது அவசியம்.
தோல் நோய்களை சரிசெய்ய உணவு முக்கியம்!
தோல் நோய்களை சரிசெய்வதில் உணவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சத்தான உணவுகளை உண்டும், காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மழைகாலத்தில் அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பதில்லை. ஆனாலும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.