ஆபத்திற்குள் தள்ளும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்.. அதிகளவு சாப்பிட்டால் என்ன நடக்கும்? ஆய்வுகள் சொல்வதென்ன?
பிரெஞ்ச் ஃபிரைஸ் அதிகமாக சாப்பிடுவதால் நீரழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வேக வேகமாக ஓடும் இன்றைய உலகில், நாம் வேக வேகமாக தயாராகும் உணவுகளை சாப்பிடவே எத்தனிக்கிறோம். அப்படியாக, காய்கறிகள்தானே நமது உடலுக்கு என்ன செய்துவிட போகிறது என நினைத்து அவற்றை எல்லா வடிவத்திலும் செய்து சாப்பிட துவங்கும் போது, அது மெல்ல மெல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் தின்னத் துவங்குகிறது. அப்படியான ஒரு உணவு தான் இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்.
ஒரு சாதாரண டீக்கடையில் இருந்து உயர்ரக ரெஸ்டாரன்ட் வரையில் எல்லா இடங்களிலும், மிக வேகத்தில், எளிதில் கிடைக்கும் இந்த ஃபிரெஞ்ச் ஃபிரைஸை தொடர்ந்து சாப்பிடுவது பிற்காலத்தில் நாம் நினைத்துப் பார்க்காத ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கிறது.
ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 40 ஆண்டுகளாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஆய்வு செய்தனர். ஆய்வின் தொடக்கத்தில் நீரிழிவு, இதய நோய் அல்லது புற்றுநோய் இல்லாதவர்கள் இதில் பங்கேற்றனர். ஆனால் ஆய்வின் முடிவில் அனைவருக்கும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சுமார் 22,300 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. "வாரத்திற்கு மூன்று முறை பிரெஞ்சு ஃபிரைஸ் சாப்பிடும்போது, நீரிழிவு நோய் விகிதம் 20 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால், வேகவைத்த, சுட்ட அல்லது மசித்த உருளைக்கிழங்கை அதே அளவு சாப்பிட்டவர்களுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கவில்லை" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம், உருளைக்கிழங்கை அதிக வெப்பநிலையில் பொரிக்கும்போது, அதன் கலோரி மற்றும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மேலும் இந்த ஆய்வு, உருளைக்கிழங்கிற்கு மாற்றாக வேறு என்ன உணவைச் சாப்பிடலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. அதன்படி, வாரத்திற்கு மூன்று முறை பிரெஞ்சு ஃபிரைஸுக்குப் பதிலாக முழு தானியங்களைச் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 19 சதவீதம் வரை குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல், வேகவைத்த, சுட்ட அல்லது மசித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு முழு தானியங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.