
தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற நாட்களில் உயர் வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு, சுய நினைவை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் உயர் வெப்பநிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. வேண்டிய அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடித்து நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. வெளியிடங்களுக்கு செல்லும்போது பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.
3. ORS கரைசலை பருகலாம். எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள திராட்சை, வெள்ளரி காய்களை எடுத்துக்கொள்ளவும்.
4. பருத்தியாலான வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும்
5. வெயிலில் செல்லும்போது குடை பிடித்து செல்ல வேண்டும் அல்லது தொப்பி போன்றவற்றை அணிந்து வெயில் தலை மற்றும் முகத்தில் நேரடியாக படுவதை குறைக்க வேண்டும்.
6. வெயிலில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்.
7. வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
8. வெயில் நேரங்களில் குளிர்ந்த காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டும். முடிந்த வரை கீழ்த்தளங்களில் இருக்க வேண்டும்.
9. பகல் நேங்களில் வீடுகளின் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்து காற்று வீட்டிற்குள் வரும்படி செய்ய வேண்டும்.
10. குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், திறந்த வெளியில் வேலை பார்ப்பவர்கள், இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப அலைகளின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே மேற்கண்ட நபர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
11. வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்கள் தனிமையில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
1. காலை 11 மணி முதல் 3 மணி வரை வெய்யிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
2. அதிக உடல் உழைப்பு வேண்டிய வேலைகளை தவிர்க்க வேண்டும்.
3. வெறும் காலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
4. மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்கவும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.
5. அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் மற்றும் பழைய உணவு பொருட்களை தவிர்க்கவும்.
6. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் வெப்பநிலை அபாயகரமான அளவிற்கு அதிகரிக்கும். எனவே பாதுகாப்பாக கையாளவும்.
1. அதிக உடல் வெப்பநிலையுடன் மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையுற்று தோல் உலர்ந்து போன்ற ஏதாவது ஒரு அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்.
2. உதவிக்காக காத்திருக்கும்போது அந்த நபரை உடனடியாக குளிர்விக்கவும். உங்களால் முடிந்தால் குளிர்ந்த இடத்திற்கு அவரை கொண்டுசெல்லவும்.
3. குளிர்ந்த நீரை அவர்களின் தோல் அல்லது ஆடையில் ஊற்றவும் அல்லது முடிந்தவரை அந்த நபரை காற்றோட்டமான சூழ்நிலைக்கு விரைவில் மாற்றவும்.
4. கடும் வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க, அனைத்து மாவட்ட துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.