வாழைக்காய் சிப்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

வாழைக்காய் சிப்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
வாழைக்காய் சிப்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

இந்தியாவில் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று வாழைக்காய் சிப்ஸ். மொறுமொறுவென தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்த இந்த சிப்ஸ் ஒன்றை எடுத்து வாயில் வைத்தாலே அதன் சுவைக்கு நாக்கு அடிமையாகிவிடும். ஆனால் அடிக்கடி சிப்ஸ் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கேடு என்ற எண்ணம் நம்மில் பலபேருக்கு உள்ளது. ஆனால் மற்ற ஸ்நாக்ஸ்களைக் காட்டிலும், சிப்ஸ் சற்று ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் சிலர். உண்மையிலேயே இந்த வாழைக்காய் சிப்ஸ் ஆரோக்கியமானதுதானா என்று தெரிந்துகொள்ளலாம்.

மெலிதாக சீவிய வாழைக்காயை பொரிப்பதற்கு முன்னால் சர்க்கரைப்பாகு, உப்பு மற்றும் சுவையை அதிகரிக்கும் சில மசாலாக்களில் புரட்டி எடுப்பதால்தான் அதன் மணமும் சுவையும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என அனைவருக்கும் தெரியும்; ஆனால் அதிலிருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் உடலுக்கு நல்லதா என்ற கேள்விதான் பலருக்கும் இருக்கிறது.

பொரித்த உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் ஒரு கப் வாழைக்காய் சிப்ஸை சாப்பிடும்போது அதனால் உடலில் சேரும் சத்துக்களின் அளவு தெரியுமா?

  • கலோரி - 374
  • புரதம் - 1.5 கிராம்
  • நார்ச்சத்து - 5 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 40 கிராம்
  • சர்க்கரை - 25 கிராம்
  • கொழுப்பு - 24 கிராம் மற்றும் பிற சத்துகளும் நிறைந்துள்ளது.

எனவே நாம் மிகவும் சோர்வடைந்திருக்கும்போது உடனடியான புத்துணர்ச்சியைப் பெற இந்த வாழைக்காய் சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக நன்கு உடற்பயிற்சி செய்தபிறகு இந்த சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது பொரித்த உணவு என்பதால் மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் என்பதை மறக்கவேண்டாம். எப்போது சாப்பிட்டாலும் சாப்பிடும் அளவை கருத்தில் கொள்ளவேண்டும்.

சுவையாக இருப்பதால் நேரடியாக வாழைப்பழத்திற்கு மாற்றாக இந்த சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம் என்று மட்டும் எண்ணவேண்டாம். எப்போதும் பழங்களே சிறந்தது. ஆனால் அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸைவிட இந்த சிப்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானதுதான். பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ்களை பசிக்கும்போது சாப்பிட்டு விட்டு சிறிது சிப்ஸ் எடுத்துக்கொண்டால் பசி அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com