45 வயதுக்குட்பட்டோரிடையே ஏற்படும் திடீர் மரணம்.. காரணம் என்ன?
45 வயதுக்கு உட்பட்டோரிடையே திடீர் மரணங்கள் அதிகரித்திருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அதிக அளவில் இதயநோயே காரணம் என்று தெரியவந்துள்ளது.
45 வயதுக்கு உட்பட்டோரிடையே திடீர் மரணங்கள் அதிகரித்திருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அதிக அளவில் இதயநோயே காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஒரு தொகுப்பைப் பார்க்கலாம். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வு ஒன்று, இந்தியாவில் 45 வயதுக்கு உட்பட்ட வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணத்துக்கு இதய நோயே முக்கிய காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளது. திடீர் மரணமடைந்தவர்களில் பாதிக்கும் மேலானோர் அதாவது 57.2 விழுக்காட்டினர், 18 முதல் 45வயதுக்குட்பட்டவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களின் சராசரிவயது 33.6 ஆகும்.
இந்த திடீர் மரணங்களில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணின் மரணத்துக்கு 4.5 ஆண்கள் என்ற விகிதத்தில் திடீர் மரணங்கள் இருந்திருக்கின்றன. இளம்வயதினரின் மரணங்களில் 42.6 விழுக்காடு வரை இதய நோய்களால் ஏற்படுகின்றன. சுவாசக்கோளாறுகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 21.3 விழுக்காடு ஆகும். விளக்க முடியாத காரணங்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21.3 ஆகும். 14.8 விழுக்காட்டினர் பிற காரணங்களால் மரணமடைந்திருக்கிறார்கள்.
ஆய்வுக்காகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 8.1 விழுக்காட்டினர் திடீர் மரணம்அடைந்திருக்கின்றனர். திடீர் மரணமடைந்தவர்களில் 57 விழுக்காட்டினருக்குப் புகைபிடிக்கும் பழக்கமும், 52 விழுக்காட்டினருக்கு மதுப்பழக்கமும் இருந்திருக்கிறது. திடீர் மரணமடைந்தவர்களில் 55 விழுக்காட்டினர் வீட்டில் மரணமடைந்திருக்கிறார்கள். 40 விழுக்காட்டினர் இரவிலோ அதிகாலையிலோ மரணமடைந்திருக்கிறார்கள்.
இதய நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, இறப்புக்கு முன்னர் எந்த விதமான நோயறிதலும் இல்லாமல் கடுமையான அடைப்புகளுடன் கூடிய நாள்பட்ட கரோனரி தமனி நோய் இருந்திருக்கிறது. இது, ஆபத்தான இதய நோய் அமைதியாக முன்னேறி வந்ததைக் குறிக்கிறது. நிமோனியா, காசநோய் போன்றவை ஐந்து மரணங்களில் ஒன்றுக்குக் காரணமாக உள்ளன. கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தவொரு குறிப்பிடத்தக்க தொடர்பையும் இந்த ஆய்வு கண்டறியவில்லை. இளம்வயதினரிடையே திடீர் மரணத்தைத் தவிர்க்க ஆரம்பகால நோயறிதல் மிகவும் முக்கியமானது என்றும், புகைபிடித்தல், மதுவைத் தவிர்ப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

