7 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குபவரா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்!

7 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குபவரா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்!
7 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குபவரா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முறையான டயட் மற்றும் தொடர் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் மிகமிக அவசியம். சரியாக தூங்காவிட்டால் அது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணிநேரம் தூங்கவேண்டும். எப்படியாயினும், எல்லாராலும் அனைத்து நாட்களிலும் நன்றாக தூங்கமுடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை மற்றும் sleep apnoea என்று சொல்லக்கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தடைகள் தூக்கத்தின்போது ஏற்படலாம். தொடர்ச்சியாக தூங்கமுடியாமல் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. போதிய தூக்கமின்மையால் பொதுவாக ஏற்படும் சில பிரச்னைகள்...

1. மன அழுத்தம்: நன்றாக தூங்குபவர்களை விட சரியான தூக்கமில்லாதவர்களுக்கு மன அழுத்த பிரச்னை அதிகமாக வரும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஒருவர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவது மிகவும் சிரமம். இது சீக்கிரத்தில் ஒருவரை மன அழுத்தத்திற்குள் தள்ளிவிடும்.

2. சுவாச பிரச்னைகள்: சரியாக தூங்காவிட்டால் அது சளி, காய்ச்சல் மற்றும் பிற மூச்சுக்குழாய் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏற்கெனவே சுவாச பிரச்னை இருப்பவர்கள் சரியாக தூங்காவிட்டால் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும்.

3. இதய நோய்கள்: நீண்ட நாட்கள் சரியான தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கார்டியோ வாஸ்குலார் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். தினசரி நன்றாக தூங்கும்போது அதுவே தானாக சரியாகிவிடும். நன்றாக தூங்காவிட்டால் ரத்தக்குழாய்கள் சரியாக இயங்காது. இது இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

4. நாளமில்லா சுரப்பிகள்: தினசரி போதுமான அளவு தூங்காவிட்டால், அது ஹார்மோன் சுரப்பு மற்றும் உடல் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நாளமில்லா சுரப்பிகள் சரிவர இயங்காவிட்டால் ஹார்மோன்கள் சரியாக சுரக்காது. இதனால் பிட்யூட்டரி சுரப்பிகள் மற்றும் பிற சுரப்பிகளின் செயல்பாடு மாறிவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com