“என்னடா வாழ்க்கை?” என்று சதா புலம்புபவரா நீங்கள்... அப்போ இது உங்களுக்குதான்!
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு செய்து பார்ப்பதன் மூலம், நம்மை நாமே மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிறது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரை.
முதல் நாள்...
சமூக உறவுகளை வலுப்படுத்தப் பயன்படுத்துங்கள். வேறொன்றுமில்லை... நீங்கள் நேசிக்கும் ஒவ்வொருவருடனும் சிறிய, அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்குங்கள். ஒரு கால், நான்கைந்து டெக்ஸ்ட் மெசேஜ்கூட போதும். நமக்கென இத்தனை பேர் இருக்கிறார்களா... என்ற மகிழ்ச்சியும் கூடவே வரும்.
இரண்டாம் நாள்...
உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒருவருக்கேனும் நன்றி சொல்லுங்கள். நன்றி கூறும் பழக்கம், மன மகிழ்ச்சியை மட்டும் தருவதில்லை... உறவுகளையும் வலுப்படுத்துகிறது.
மூன்றாம் நாள்...
யாருக்காவது உதவி செய்யுங்கள். பொருளுதவிகூட இல்லை... சின்ன பாராட்டு, தோளில் தட்டிக்கொடுத்தல்கூட போதும். சமூகத்தில் பொருட்படுத்தக்கூடிய நபராக நீங்களும் இருப்பீர்கள்.
நான்காம் நாள்...
நல்ல அனுபவங்களை உருவாக்குங்கள். காஷ்மீர், தாய்லாந்து கனவை நிறைவேற்றச் சொல்லவில்லை. காலை உணவை ரசித்துச் சாப்பிடுவது, மாலை நடையை அனுபவித்துச் செய்வதுகூட நம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
ஐந்தாம் நாள்...
உடன் வேலை செய்வோரை நேசியுங்கள். தெரிந்தோ தெரியாமலோ நாம் நம் உடன் பணிபுரியும் நண்பர்களுடன் அதிகம் முரண்படுகிறோம், அவமரியாதை செய்கிறோம். அலுவலகத்தில் நெருங்கிய நண்பர்களைக் கொண்டவர்கள் அதிக ஈடுபாடுடன் வேலை செய்வதோடு புதுமையான யோசனைகளைப் பகிர்ந்து, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்துவிடுவார்கள் என்கிறது ஓர் ஆய்வு!
ஆறாம் நாள்....
நண்பர்கள் வெளியே அழைக்கும்போது, சாக்குப்போக்குச் சொல்லி தவிர்க்காதீர்கள். ஓடிடி-யில் படம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஊர் சுற்றுவது உத்தமம். சினிமாவுக்கு டிக்கெட் போட்டால்கூட கூடுதலாக ஒரு டிக்கெட் எடுப்பது நண்பர்களை அழைப்பதற்கான தூண்டுகோலாக இருக்கும்.
ஏழாம் நாள்...
கடந்த ஆறு நாளும் நம் பயிற்சியை ஒழுங்காகச் செய்தோமா என்றும், அதன் விளைவுகளைப் பற்றியும் மனதுக்குள் அசை போடுங்கள். ‘அடடே’ என்று தோன்றும். அத்துடன் விட்டுவிடாமல், உடற்பயிற்சி போல அதனை தினமும் செய்யுங்கள். புதிய நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்! வாரப் பயிற்சி வருடப் பயிற்சியாகட்டும்... வாழ்த்துகள்!