மே.வ. இடைத்தேர்தல்: தனது கோட்டைக்கே திரும்பும் மம்தா... பாஜக போடும் ப்ளான் என்ன?

மே.வ. இடைத்தேர்தல்: தனது கோட்டைக்கே திரும்பும் மம்தா... பாஜக போடும் ப்ளான் என்ன?
மே.வ. இடைத்தேர்தல்: தனது கோட்டைக்கே திரும்பும் மம்தா... பாஜக போடும் ப்ளான் என்ன?

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அம்மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மம்தாவின் கோட்டையாக கருதப்படும் பவானிபூரில், அவருக்கு கடும் சவால் கொடுக்கும் வியூகத்தை பாஜக வகுத்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எனினும், தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றதால், மம்தா மீண்டும் முதல்வரானார். இந்நிலையில், வரும் 30-ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் நீடிக்க இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது கட்டாயம். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர வேண்டுமானால் நவம்பர் 5-ஆம் தேதிக்குள் எந்த சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் வெற்றிபெற வேண்டும். இதற்காக பவானிபூரில் வெற்றிபெற்றிருந்த திரிணாமூல் கட்சி எம்எல்ஏ, மம்தா போட்டியிட வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மம்தா பவானிபூரை தேர்ந்தெடுக்க காரணம், அது அவரின் கோட்டை போன்றது. கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் இந்த தொகுதியில் இருந்தே தேர்தெடுக்கப்பட்டு முதல்வராக அமர்ந்தார். ஆனால், திரிணாமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி விடுத்த சவால் காரணமாக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முடிவுக்குச் சென்றார் மம்தா. அங்கு 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய, தற்போது தனது கோட்டையான பவானிபூருக்கே மீண்டும் திரும்பியுள்ளார்.

பவானிபூர் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் பாஜக தரப்பு கொரோனா சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளைக் காரணம் காட்டி, இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என போர்க்கொடி தூக்க, கொரோனா சூழ்நிலை மாநிலத்தில் கட்டுக்குள் இருக்கிறது எனக் கூறி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்துவந்தது திரிணாமூல் காங்கிரஸ். இறுதியாக காலியாக உள்ள சம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுடன் பவானிபூர் இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தேர்தல் ஆணையத்தின் முடிவால் மேற்கு வங்க பாஜக அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆறு மாத காலத்திற்கு பின் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியிருந்தால் மம்தா முதல்வர் அரியணையை விட்டு இறங்கவேண்டிய சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதனை எண்ணியே மேற்கு வங்க பாஜக, தேர்தலை தாமதப்படுத்த கணக்குப் போட்டது. ஆனால், பாஜக மத்திய தலைமை இதனை விரும்பவில்லை என்கிறார்கள் 'இந்தியா டுடே'-வுக்கு பேசிய அம்மாநில பாஜக பிரமுகர்கள்.

"தேர்தல் நடைபெறாமல் போனால், தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற பொதுமக்கள் மத்தியில் வருவதோடு, மம்தாவுக்கு அது அதிக அனுதாபத்தைப் பெற்றுகொடுக்கும் என்பதால் மத்திய தலைமை அதை விரும்பவில்லை" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பாஜக எப்படி தயாராகிறது?

மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் தனது வேட்பாளரை களமிறக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்று மேற்கு வங்க காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, சுவேந்து அதிகாரியவே மீண்டும் மம்தாவுக்கு எதிராக நிறுத்தபோவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பாஜக தலைமை அதனை மறுத்துள்ளது. மம்தாவுக்கு எதிராக மற்றொரு வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறியுள்ளது. புதிய வேட்பாளரை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தத் தொகுதியை பொறுத்தவரை, பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளில் முக்கியமானவர் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.பி தினேஷ் திரிவேதி. இவரே வேட்பாளராக அறிவிக்கப்பட, அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவரை அடுத்து நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ருத்ரனில் கோஷ் வாய்ப்பை பெறலாம். இவர்தான் சமீபத்தில் முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரிணாமூலின் சோவந்தேப் சட்டோபாத்யாயிக்கு எதிராக களம்கண்டு 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முன்னதாக சுவேந்து அதிகாரி 'இடைத்தேர்தலில் மம்தாவை எதிர்க்க தயார்' என்று கூறியிருந்தார். ஆனால், பாஜக அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. ஏனென்றால், இடைத்தேர்தல்களை பொறுத்தவரை பெரும்பாலும் அவை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும். மேலும், பவானிப்பூர் மம்தாவின் கோட்டையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவேளை சுவேந்து தோற்கடிக்கப்பட்டால், தற்போது அவரை வைத்து மம்தாவுக்கு ஆட்டம் காண்பித்து வரும் பாஜக தலைமைக்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அதனை தவிர்த்துள்ளது.

பவானிபூர் தொகுதியை பொறுத்தவரை, கொல்கத்தாவிற்குள் மிகவும் உயர்ந்த காஸ்மோபாலிட்டன் பகுதியாக இது கருதப்படுகிறது. பவானிபூர் மக்கள் தொகையில் குஜராத்திகள், பஞ்சாபிகள், மார்வாடிகள் என வங்காளமல்லாத பிற சமூகத்தினர் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் வாக்குகளை கவர்ந்திழுக்க முயற்சிக்கத் தொடங்கியுள்ளது பாஜக. இவர்களின் வாக்குகள் தான் 2019 மக்களவைத் தேர்தலில், திரிணாமூலுக்கு பெரும் அச்சத்தை அளித்தன. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் பதிவாகின. இதனாலேயே, நடந்து முடிந்த தேர்தலில் மம்தா தொகுதி மாறினார் என்றும் பாஜக கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் பழைய கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் தனது கோட்டைக்கே திரும்பியிருக்கும் மம்தா வரும் 10-ம் தேதி முதல் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பிரசாரத்தை தொடங்கும் முன்பாகவே, " தேவையில்லாமல் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு காசை வீணடிக்க வேண்டாம்" என்று பாஜகவை சீண்டியிருக்கிறார். பதிலுக்கு பாஜக தரப்போ, " நந்திகிராமில் சந்தித்தது போல் பவானிபூரிலும் மம்தா தோல்வியை தழுவுவார்" என்று பதிலடி கொடுத்திருக்கிறது. தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்பாகவே எழுந்துள்ள வார்த்தை போர் இடைத்தேர்தலை சூடாக்கியுள்ளது.

- மலையரசு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com