குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டியவை; தவிர்க்க வேண்டியவை!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டியவை; தவிர்க்க வேண்டியவை!
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டியவை; தவிர்க்க வேண்டியவை!

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே காய்ச்சல், தோல்நோய்கள், டெங்கு, மலேரியா, மர்மக்காய்ச்சல் என விதவிதமான நோய்களும் நம்மை நடு நடுங்க வைத்துவிடுகிறது. இதில், கொரோனா அச்சமும் சேர்ந்து பயமூட்டிக்கொண்டிருக்கும் சூழலில் குளிர்காலத்தில் நோய்கள் வந்து மிரட்டுவது ஏன்? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை உட்கொள்ளவேண்டும்? என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளை அரசு பொதுநல மருத்துவர் டாக்டர் ராமலிங்கத்திடம் முன்வைத்தோம்.

குளிர்காலத்தில் வரக்கூடிய நோய்கள்!
 
கோடை காலத்திலிருந்து திடீரென்று நமது உடல் குளிருக்கு மாற்றத்தினை ஏற்பதால் உடல் வெப்பநிலைக் குறைந்து, ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இன்னும் பிரச்சனை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், குளிர்காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் கிருமிகள் பெரும் வலிமையோடு வளர்ந்து தில்லாக தாக்குகின்றன. சளி, காய்ச்சல், இருமல், சைனஸ், ஆஸ்துமா, தோல் நோய்கள், பாத வெடிப்புகள் போன்றவைதான் குளிர்காலத்தில் வரும் நோய்கள்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். ஒன்று உடலைச் சார்ந்தது; இரண்டாவது மனதைச் சார்ந்தது. உடலைச் சார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவுக்கு புரதச்சத்துகளும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் தினமும் எடுத்துவரவேண்டும். மீன், முட்டை, இறைச்சி, பால், பாதாம், தேங்காய் ஆகியவற்றில் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் கடலை வகைகள், பருப்பு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். இட்லியிலேயே உளுந்து சேர்ப்பார்கள் என்பதால், காலை உணவிலேயே உடலுக்கு தேவையான புரதம் வந்துவிடும்.

நாம் சாப்பிடும் உணவில், 50 சதவீதம் மாவுச்சத்தும், 30 சதவீதம் வரை புரதச்சத்தும், 10 சதவீதம் கொழுப்பு சத்தும், மீதியுள்ள 10 சதவீதம் வைட்டமின்களும், தாது உப்புகள் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். புரதச்சத்தை பெரும்பாலும் காலை மதிய உணவில்தான் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். மதியம் காரக்குழம்பு வைப்பவர்கள் சிறு பருப்பு போட்டு கூட்டு வைத்து சாப்பிட்டால் புரதம் கிடைத்துவிடும்.அடுத்ததாக, வைட்டமின்கள் பழங்களிலும் பச்சைநிறக் காய்களில்தான் அதிகம் இருக்கும். குறிப்பாக, வைட்டமின் சி ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த நெல்லிக்காய், பசலைக்கீரை, அவகோடா,ப்ராக்கோலி, கிவி, ஆரஞ்ச், அன்னாச்சிப்பழம், செர்ரிப் பழம் , ப்ளுபெர்ரி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி,குடைமிளகாய், பீன்ஸ், பப்பாளி, ஆப்பிள், மாதுளை ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளவேண்டும். இவற்ரை ஜூஸாக குடிப்பதை தவிர்க்க வெண்டும்.

மேலும், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை அருந்துவது, வீட்டு உணவுகள் சாப்பிடுவது நல்லது. ஐஸ்க்ரீம், ஃப்ரிஜ் வாட்டர், குளிர்வகையான பூசணிக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், செள செள போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலங்களில் ரத்த ஓட்டம் குறைவதால் வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்.  சூடான சுக்குபால், மிளகு மஞ்சள் பால், இஞ்சிப் பால் அடிக்கடி குடிக்கலாம்.

மிளகு கலந்த சூப், மிளகு-பூண்டு ரசம் வைத்தும் குடிக்கலாம். நம் ரத்தம் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால், முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுக்கீரை சூப் வைத்தோ உணவாகவோ உட்கொள்ளலாம்.
ரத்தம் அதிகரிக்கும்.

கடினமான உணவுகளை உட்கொள்ளுதல்!

குளிர்காலத்தில் கடினமான உணவைத்தான் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். கடினமான உணவை செரிமானம் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தை உண்டாக்குகிறது. அதனால்தான், குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் தினமும் இறைச்சி எடுத்துக்கொள்வார்கள்.

நமக்கு குளிர்காலம் என்பது ஜனவரி வரைதான். அதனால், இறைச்சி, கிழங்கு வகைகள்  அடிக்கடி உண்ணலாம். எளிதாக செரிமானம் செய்யக்கூடிய உணவை கோடை காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், வெளியிலும் வெப்பம் உள்ளேயும் வெப்பம் என்பதால் எளிய உணவுகளை கோடை காலத்தில் உண்ணவேண்டும்.

மனதை ஆரோக்கியமாக வைத்திருத்தல்!

நோய் எதிர்ப்பு சக்தி குறைய இரண்டாவது காரணம் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்காமல் இருப்பதே. மனதில் எப்போதெல்லாம் அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் அதிகமாக சுரக்கும். அதனால், மன அழுத்தம் அதிகமாகி நோய் எதிர்ப்பு சக்திகுறையும். அது நீரிழிவு நோய்யையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும்.

மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளாமல் போவதால் அதிக பிரச்சனைகள் வரும். முக்கியமாக ஆறிலிருந்து ஏழு மணிநேரம் உறக்கம் இருக்கவேண்டும். நம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவேண்டுமென்றால், பாட்டுக்கேட்பது, புத்தகம்படிப்பது, மனதிற்கு பிடித்தவர்களுடன் பேசுவது போன்றவற்றால் மன அழுத்தம் குறையும். அதனால், நமக்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் வருவது குறைவது.


- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com