ஊர் முழுக்கவும் வளையல் வியாபாரிகள்.. வைத்தூர் வளையல் கடைக்காரர்களும்.. தமிழக விழாக்களும்!

ஊர் முழுக்கவும் வளையல் வியாபாரிகள்.. வைத்தூர் வளையல் கடைக்காரர்களும்.. தமிழக விழாக்களும்!
ஊர் முழுக்கவும் வளையல் வியாபாரிகள்.. வைத்தூர் வளையல் கடைக்காரர்களும்.. தமிழக விழாக்களும்!

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகிலுள்ள வைத்தூர் கிராமம் முழுவதுமே வளையல் வியாபாரம் செய்யும் வளையல்காரர்கள்தான் நிறைந்திருக்கின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் வளையல் சத்தத்துடன் கலகலப்பூட்டுகிறது வைத்தூர்.

வளையல்கள்தான் பெண்களின் மகிழ்ச்சி. வீட்டில் எவ்வளவு சண்டை நடந்துகொண்டிருந்தாலும் தெருவில் வளையல்கடைகளைப் பார்த்தால் அத்தனை சண்டையும் மறந்து குழந்தைகளாய் மாறிவிடுவார்கள் பெண்கள். இத்தனை மகிழ்ச்சிகளுக்கும் உரிய வளையல்களின் வாழ்விடமாக உள்ளது வைத்தூர். இந்த ஊர் முழுதுக்கும் கலகலக்கிறது வளையல் சத்தம். வைத்தூரில் உள்ள எல்லா வீடுகளிலும் வளையல் வியாபாரம்தான் தொழில். ஊருக்குள் நுழைந்தவுடனே தலையில் வளையல் பெட்டியுடன் சிலர் செல்கின்றனர், சிலர் சைக்களில், சிலர் இருசக்கர வாகனங்களில், இன்னும் சிலரோ பிரத்யேகமான வளையல்பெட்டி தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வியாபாரத்திற்கு போகின்றனர். இப்படி வைத்தூரில் உள்ள எல்லா வீடுகளுமே வளையல்கார வீடுகள்தான். அதுபோல சுற்றியுள்ள மாவட்டங்களில் எந்த ஊரில் திருவிழாவாக இருந்தாலும் அங்கு சென்று வளையல் கடைகள் போடுவதும் வைத்தூர்காரர்கள்தான்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகில் உள்ள வைத்தூரில் 1900ஆம் ஆண்டுக்கு முன்னமே மண்ணால் ஆன வளையல்கள் செய்து வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்ய தகவலையும் அந்த ஊருக்கு சென்றபோது தெரிந்துகொள்ள முடிந்தது. அந்த ஊரின் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள குளத்தில் கிடைக்கும் ஒரு வகை தனித்துவமான மண்ணைக்கொண்டு வளையல் செய்திருக்கிறார்கள் வைத்தூர்காரர்கள்.

தலையில் பெட்டியை சுமந்தபடி வளையல் வியாபாரத்திற்கு கிளம்பிய ரெங்கசாமியிடம் பேசியபோது “ இந்த ஊர்ல இருக்குற நாங்க எல்லாருமே பழைய தெலுங்கு மொழி பேசுற ஆளுங்க. சில நூற்றாண்டுக்கு முன்னாடியே இந்த ஊருக்கு வந்துட்டதா எங்க முன்னோர்கள் சொல்லுவாங்க. இந்த ஊருக்கு வந்தோன, என்ன தொழில் செய்யுறதுன்னு யோசிச்சு அப்பவே வளையல் தயாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க எங்க ஆளுங்க. அப்படி வளையல் தயாரிச்சு அதை ஊர் ஊரா போய் விக்கவும் செஞ்சிருக்காங்க. ஊர் ஊரா போய் விக்கிறது மட்டுமில்லாமல் எல்லா ஊர் திருவிழாவுக்கும் போய் கடைபோட்டு வியாபாரம் செய்யுறதையும் அவங்கதான் தொடங்கிவச்சிருக்காங்க. அதன் தொடர்ச்சியாத்தான் இப்பவும் நாங்க வளையல் வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் ஒரு சிறுமியிடம் வளையல்களை காட்டியபடியே

வைத்தூர் மண்வளையல் கதை நம்மை ஆச்சர்யப்படுத்த, அதுபற்றி சொல்கிறார் நடராஜன் “ எங்க ஊர் பெருமாள் கோவிலுக்கு பக்கத்துல இருக்குற குளத்துலதான் வளையல் தயாரிச்சாங்க. இங்க கிடைக்கிற பிரத்யேகமான மண்ணை பிசைஞ்சி அதுக்கு நடுவில் கம்பிகள் வச்சு, அச்சுகள் மூலமாதான் வளையல் செஞ்சிருக்காங்க. அப்படி களிமண்ணால் செய்யப்பட்ட வளையல்களை சூலைகள் அமைச்சு கொளுத்தி உருவாக்கியிருக்காங்க. இந்த வளையல்கள் மிகவும் கலைநயத்தோடும், நுண்ணிய வேலைப்பாடுகளுடனும் இருந்திருக்கு. அப்ப வைத்தூர் மண் வளையல்கள் தமிழ்நாடு முழுதுக்கும் மிக பிரபலமாவும் இருந்திருக்கு. இருந்தாலும் அதுபோன்ற வளையல்கள் செய்யுறது மிகவும் கஷ்டமாகவும், அதிக நேரம் பிடிக்கக்கூடிய வகையிலும் இருந்ததால கொஞ்சம் கொஞ்சமா உற்பத்தி குறைய ஆரம்பிச்சிருக்கு. ஒருகட்டத்துல ரொம்ப குறைவான விலைக்கு வெளி மார்க்கெட்டில் வளையல்கள் கிடைக்க ஆரம்பிச்சோன மண் வளையல்கள் செய்யுறது சுத்தமா நின்னு போச்சு. அந்த சிறப்பான கலையை இப்ப நாம இழந்திட்டோம்” என்று கவலைப்படுகிறார்

தற்போதைய வளையல் வியாபாரம் பற்றி சொல்கிறார் தள்ளுவண்டியில் வளையல் கடை வைத்திருக்கும் நாகராஜ் “ இங்க வளையல் தயாரிப்பு நின்னுபோனாலும் அப்பவே வெளியிலிருந்து வளையல்கள் வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க எங்க முன்னோர்கள். ஒரு கட்டத்தில் எங்க ஊரில் இருந்து பல ஊர்களுக்கும் வியாபாரத்துக்காக மக்கள் போய் தங்க ஆரம்பிச்சிட்டாங்க. மணப்பாறை, இடையப்பட்டி, வளநாடு, கண்டேரி, களத்தூர், வரிச்சியூர்ன்னு பல ஊர்ல இருந்து தமிழகம் முழுதுக்கும் வளையல் வியாபாரம் செய்யுறவங்க எங்க ஊர்க்காரங்கதான். அவங்க எல்லோருக்கும் குலதெய்வ கோவில் எங்க ஊரில்தான் இருக்கு” என்கிறார்

தொடர்ந்து பேசும் அவர் “ மேல நான் சொன்ன ஊரில் எல்லாம் கூட்டமா தங்கியிருந்தாலும் தமிழ்நாடு முழுக்கவும் தங்கி வளையல் வியாபாரம், பேன்சி கடைகள் வச்சிருப்பது பெரும்பாலும் வைத்தூர்காரங்கதான். அவங்க எல்லோருக்கும் இந்த ஊரில் பூர்வீக வீடு உண்டு. இப்ப எங்க ஊர்ல 500 குடும்பத்துக்கு மேல இருக்கு, இந்த எல்லா குடும்பத்துக்கும் தொழில் வளையல் வியாபாரம்தான். பசங்க படிச்சாலும்கூட இந்த தொழிலுக்குத்தான் வர்றாங்க” என்கிறார்

கடும் போட்டிகள் நிறைந்த இந்த தொழில் பற்றி சொல்கிறார் கோவிந்தராஜ் “ ஆமாம், தமிழகம் முழுதுக்கும் இப்ப இந்த தொழில் பலரும் செய்யுறாங்க. குறிப்பா மார்வாடிகள் முழுசா இந்த தொழிலில் இறங்கிட்டாங்க. நாங்களும்கூட இப்ப அவங்ககிட்டதான் மொத்தமா வளையல்கள் வாங்க வேண்டி இருக்கு. எங்களுக்கு தேவையான மொத்தமான சரக்கு எல்லாமே சென்னை, திருச்சி, மதுரை அப்படின்னு மார்வாடிங்ககிட்டதான் போய் வளையல் வாங்குறோம். வளையல்கள்லயே பல ரகம் இருக்கு டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான், மும்பை ன்னு பல ரகங்கள் இருக்கு, அதுக்கு தகுந்த மாதிரி தரமும், டிசைனும், விலையும் இருக்கும் அதனால பாத்து, பாத்துதான் நாங்க பொருள் வாங்குறோம் “ என்கிறார்

எல்லோருடைய வீடுகளில் நடக்கும் சுபகாரியங்கள் அனைத்தும் வளையல்களுடன்தான் தொடங்கும். அதுபோல திருவிழாக்கள் எல்லாம் வளையல் கடைகள் இல்லாமல் நிறைவும் பெறாது, மகிழ்வும் தராது. கருவில் இருக்கும்போது வளைகாப்பு நிகழ்ச்சியில் குழந்தையின் காதுகளில் கலகலக்க தொடங்கும் வளையல் சத்தம், காலம் முழுதும் நீங்காமல் தொடர்ந்து வரக்கூடியது. ஆமாம் வளைகாப்பு வளையல், குழந்தைகள் வளையல், சடங்கு வளையல், கல்யாண வளையல் அப்படின்னு வளையல்கள் பல ரகம் அதுபோலவே கண்ணாடி வளையல், செட் வளையல், ஒத்த வளையல், தங்கபாப்பா வளையல், மணப்பெண் வளையல், மெட்டல் வளையல், ரப்பர் வளையல், கவரிங் வளையல் ன்னு பல விதங்களில் வளையல்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இவர்கள்.

500 குடும்பங்கள் வளையல் வியாபாரம் செய்வது அத்தனை சாதாரணம் இல்லை. எப்படி இது சாத்தியமாகிறது என்று சொல்கிறார் சன்னாசி“ எங்க ஊர்ல இவ்வளவு குடும்பங்கள் இருந்தாலும், வளையல் வியாபாரம் செய்யுற எல்லாருக்கும் சில ஊர்களை பிரிச்சி விட்ருவோம். அவங்க அந்த ஊர்ல மட்டும்தான் வியாபாரம் செய்ய முடியும். ஒரு ஊர்ல வியாபாரம் செய்யுறவங்க அடுத்த ஊருக்கு போக மாட்டாங்க. புதுக்கோட்டை மட்டும் இல்லாமல் நாங்க தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை வரைக்கும்கூட போய் வியாபாரம் செய்வோம். நடந்துபோறவுங்க, தள்ளுவண்டியில வியாபாரத்துக்கு போறவுங்க ஒரு நாளைக்கு அஞ்சு கிலோமீட்டர் தூரம் போவாங்க. சைக்கிளில், வண்டியில் போய் வியாபாரம் செய்யுறவங்க ஒரு நாளைக்கு பத்து ஊருக்குக்கூட போய் வியாபாரம் செய்வாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஊர் பிரிச்சி விட்டுட்டதால ஒரு பிரச்சினையும் எங்களுக்குள்ள வர்றதில்லை” என்கிறார்

தொழில் இப்ப எப்படி இருக்குன்னு கோவிந்தராஜ்கிட்ட கேட்டோம் “ கொரோனாவால அஞ்சு மாசமா தொழில் ஒன்னும் இல்லை. எந்த ஊர்லயும் திருவிழா, விசேசங்கள் எதுவும் இல்லை, அதனால ரொம்ப சிரமத்தில இருக்கோம். இப்பதான் மறுபடியும் தொழிலுக்கு போக ஆரம்பிச்சிருக்கோம். நடந்து போய் வியாபாரம் செய்யுறவங்களுக்கு தினமும் நூறு, இருநூறுதான் கிடைக்கும். தள்ளுவண்டி, வண்டில போய் வியாபாரம் செஞ்சா ஐநூறு, ஆயிரம் கிடைக்கும். இப்ப வளையல் மட்டுமே இல்லாமல் பேன்சி பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் எல்லாமே விக்கிறோம் அதனால் ஓரளவு வியாபாரம் பரவாயில்லை. சுத்துபட்டு ஊரில் எங்க திருவிழா போட்டாலும் எங்க ஊருகாரங்கதான் கடைகள் போடுவோம். அப்ப எப்படியும் எங்க ஊர்க்காரங்க பதினைந்து, இருபது கடைகள் போடுவாங்க. அதுபோல திருவிழா நேரத்துல பத்து, பதினைந்தாயிரம் வியாபாரம் நடக்கும். இப்ப நாங்க பலரும் படிச்சிட்டு வந்தாலும்கூட வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், பாரம்பரிய தொழிலான இந்த தொழிலைத்தான் செஞ்சிகிட்டு இருக்கோம். கொஞ்ச நாள் இந்த தொழில்ல இருந்தா அப்புறம் வேற தொழிலுக்கு போக மனசு வர்றது இல்லை” என்கிறார் புன்னகையுடன்

 “ ஊர்ல இருக்குற ஆம்பிளைங்க பெரும்பாலும் வளையல் வியாபாரத்துக்காக வெளியூர் போயிடுவோம், திருவிழாக்களுக்கு வியாபாரத்துக்கு போனால் திரும்ப பத்துநாள்கூட ஆகும். அந்த நேரத்துல குடும்பத்தையும், விவசாயத்தை பெண்கள்தான் கவனிச்சுக்குகிறாங்க. வளையல் வியாபாரம் என்பது ஆத்மார்த்தமானது, குழந்தைகள் தொடங்கி பெரியவங்க வரைக்கும் வளையல்கடைகளை பாத்தாலே குதூகலமாயிடுவாங்க. வீட்ல எந்த விசேசம்ன்னாலும் முதல்ல வளையல் காரங்களைத்தான் தேடுவாங்க. நாங்க தொடர்ச்சியா சில ஊர்களுக்கு போறதால அந்த ஊர்ல உள்ள வீடுகளில் என்ன விசேசம்ன்னாலும் எங்களுக்கு தெரியும். எங்களையும் அவங்க உறவினர்கள் போலவே பாவிச்சு கல்யாணம், காதணிவிழா எல்லாத்துக்கும் பத்திரிக்கைல்லாம் கொடுப்பாங்க. சொந்த சகோதரனைப்போல, அப்பாவைப்போல நினைச்சி தங்களோட கையை கொடுத்து வளையல் போட்டுவிட சொல்ற நம்பிக்கைத்தான் இந்த தொழிலை நாங்க இத்தனை தலைமுறையா தொடர காரணம். இந்த நம்பிக்கையும், சந்தோசமும்தான் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் எங்களை இந்த தொழிலை விட்டு போகவிடாம வச்சிருக்கு” என்கிறார் நாகராஜன் வளையல்களை அடுக்கியபடியே.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com