\
vadakku vaasal 11 series to bihar politics issue
Samrat ChoudharyPTI

வடக்கு வாசல் - 11 | பீகாரில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை.. நெருக்கடி தரும் எதிர்க்கட்சிகள்!

இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் (குற்றம்) என்றாலும், வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியதால் விமர்சனம் எழுந்தது.
Published on: 

முதல்வரின் கருத்தை சர்ச்சை

சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றிய எதிர்க்கட்சிகளின் அறிக்கைப் போர், பீகாரிலும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் மாநில முதல்வரே எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார். சமீபத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருப்பது பற்றி பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்து கருத்து, பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரியின் வீடியோவை பகிர்ந்து, கிண்டல் செய்துள்ளார். பீகாரில் கிரைம் நடக்கலாம், ஆனால் அவையெல்லாம் அபராத் அல்ல என்று அதில் தெரிவித்துள்ளார். குற்றம் என்பது ஆங்கிலத்தில் கிரைம் என்றும் ஹிந்தியில் அபராத் என்றும் அழைக்கப்படும் சொல்.

Samrat Choudhary
Samrat ChoudharyPTI

இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் (குற்றம்) என்றாலும், வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியதால் விமர்சனம் எழுந்தது. இரண்டும் வேறு வேறு என்று பேசி, பீகாரின் உண்மை நிலையை முதல்வர் மறைக்க முயற்சி செய்கிறார் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

அபராத் என்பது தடுக்க முடிந்த குற்றம்; கிரைம் என்பது தடுக்க முடியாத குற்றம் என்றொரு விளக்கமும், அபராத் என்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது, கிரைம் என்பது தனிநபர்களின் தவறான நடவடிக்கை என்றொரு விளக்கமும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து தரப்பட்டுள்ளது.

அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்

சமீபத்தில் ஜமுயி பகுதியில் பத்தாவது படிக்கும் சிறுவன், இன்னொரு சிறுமியை சாலையோரமாய் ஸ்கூட்டியில் நின்றபடி செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்தபடி அங்கு வந்த கும்பல் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு அதை வீடியோவாகவும் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்யவே, பெரிய அளவில் வைரலானது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளும் கண்டனம் தெரிவித்தன. மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை அரசு கையாளும் விதம் குறித்து பெரிய அளவில் கேள்வி எழுந்தது. சம்பவத்தில் தொடர்புடைய சிலரை காவல்துறை செய்தது. முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் என்பவர் மீது என்கவுண்டர் நடந்தது.

இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில மக்கள் தொடர்புத் துறை அமைச்சர், 'உலகில் குற்றங்களே நிகழாத இடமில்லை. ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. தவறு செய்பவர்கள் எவரும் தப்பிவிட முடியாது' என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளிக்காததால், தகவல் தொடர்பில் சிறு தாமதம் ஏற்பட்டது. காவல்துறை நடவடிக்கை எடுக்க நேரமானது என்று தரப்பட்ட விளக்கம்தான் எதிர்க்கட்சிகளை கொந்தளிக்கவைத்து, சம்பந்தப்பட்ட நிகழ்வு, இணையத்தில் வைரலான பின்னரே காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தது, சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள்தான். இல்லாவிட்டால் விஷயம் வெளியே தெரிய வந்திருக்காது என்று பேசப்பட்டது.

தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை

வீடியோவில் அடையாளம் காணப்பட்ட நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான அரசிடம், "பொது வீதியில் ஒரு சிறுமிக்குக்கூட ஏன் பாதுகாப்பு இல்லை?" என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜமுயி விவகாரத்தில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நூற்றுக்கணக்கான கணக்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

rahul gandhi
rahul gandhiANi

தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு சரியாக விளக்கமளிக்க முடியாமல் பாஜக அரசு தடுமாறுகிறது. பீகார் முதல்வராக சாம்ராட் சௌத்ரி பேசுவதெல்லாம் இணையத்தில் கிண்டலடிக்கப்படுகிறது. ஒவ்வொரு பேச்சும், எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது. முதல்வர் மீது 7 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

பொதுமேடையில் நேர்மையான ஐ.ஏ.எஸ் & ஐ.பி.எஸ் அதிகாரிகள் அமர்ந்துள்ள இடத்தில் முதல்வர் சாம்ராட் சௌத்ரி உட்கார்ந்திருப்பது பீகாருக்கு பெருமையா, அவமானமா என்பதை மக்களே நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் என்கிறார் தேஜ்ஸ்வி யாதவ்.

தேஜ்ஸ்வி யாதவ் மட்டுமல்ல, பிரஷாந்த் கிஷோரும் கடந்த காலங்களில் முதல்வர் சௌத்ரி மீது பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். 1995 ஆண்டு தாராபூரில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் (தாராபூர் வழக்கு எண் 44/1995) இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் அவர்தான் முக்கிய குற்றவாளி என்கிற பேச்சு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

முதல்வருக்கு எதிராக ஆவணம்

அதே கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தான் 15 வயது நிரம்பிய சிறுவன் என்று குறிப்பிட்டு, பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தின் போலிச் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தண்டனையிலிருந்து தப்பித்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த விஷயத்தைத்தான் பிரஷாந்த் கிஷோர் அம்பலப்படுத்தினார். வழக்கு சம்பந்தமான சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை வெளியிட்டு, முதல்வர் உடனடியாக பதவியிலிருந்து விலகவேண்டும் என்று பேசியிருந்தார்.

நீதிமன்ற பதிவேடுகளில் மட்டுமல்ல, முதல்வர் சௌத்ரி போட்டியிட்ட தேர்தல்களின் வேட்புமனுத் தாக்கல் ஆவணங்களையும் எதிர்க்கட்சிகள் ஆதாரமாக காட்டுகிறார்கள். 1995ல் அவருக்கு 25 அல்லது 26 வயது இருக்கலாம் என்பதுதான் குற்றச்சாட்டு. இதற்கு பதிலடியாக, பிரசாந்த் கிஷோர், குழந்தைபோல் நடந்துகொள்கிறார் என்ற பேசினார், முதல்வர்.

prashant kishor
prashant kishorpti

1995ல் தன்னுடைய தந்தை சமதா கட்சியின் தலைவராக இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஒரு பழைய அரசியல் வழக்கு என்றும், 2003ல் சட்டப்பூர்வமாக வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் விளக்கமளித்தார். தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாகவும், சிபிஐ விசாரணையில்கூட தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

1995 போலவே 1999ல் நடந்த இன்னொரு கொலை வழக்கிலும் முதல்வரின் பெயர் அடிபடுகிறது. 1999-இல் பாட்னாவில் நடந்த பரபரப்பான சில்பி ஜெயின் & கௌதம் சிங் கொலை வழக்கிலும் இவரது பெயர் தொடர்புபடுத்தப்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது.

பாட்னாவைச் சேர்ந்த துணிக்கடை அதிபரின் மகளான சில்பி ஜெயின், ஆர்.ஜே.டி கட்சியின் இளைஞரணி நிர்வாகியான கௌதம் சிங்குடன் ஒரு குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரே காரில் நெருக்கமாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட குடியிருப்பு, அன்றைய பீகார் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரரும், பிரபல அரசியல்வாதியுமான சாது யாதவ் என்பவருக்கு சொந்தமானது.

காதல் ஜோடி, காரில் தற்கொலை என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டாலும் பின்னாளில் சந்தேக மரணமாக சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வருவதற்கு முன்பே, ஏராளமான கட்சி நிர்வாகிகள் கூடி தடயங்களை அழித்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட கார் அவசர அவசரமாக காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

tejashwi yadav
tejashwi yadavpti

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்காக பின்னர் மாற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. முக்கிய நபராக கருதப்பட்ட சாது யாதவ், டி.என்.ஏ சாம்பிள் தர மறுத்துவிட்டார். டி.என்.ஏ சாம்பிள் எடுக்கப்பட்ட நபர்களில், ராக்கேஷ் குமார் என்றொருவர் இருந்தார். அவர்தான் தற்போதைய முதல்வர் சாம்ராட் சௌத்ரி என்றொரு பகிரங்க குற்றச்சாட்டை பிரஷாந்த் கிஷோர் முன்வைத்துள்ளார்.

ஒரு பக்கம் பிரஷாந்த் கிஷோர், இன்னொரு பக்கம் தேஜஸ்வி யாதவ் என் இருமுனை தாக்குலுக்கு ஆளாகியுள்ளார், முதல்வர் சௌத்ரி. அதே நேரத்தில் மாநிலத்தில் குற்றச்செயல்களின் திடீர் அதிகரிப்பும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நான்கு மாதங்களுக்குள் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, இன்னொரு முதல்வர் மாற்றத்தை நோக்கி நகரும் என்றுதான் தெரிகிறது.

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: வடக்கு வாசல் - 10 | சர்ச்சையாகும் எஸ்ஐஆர் நடைமுறை.. உச்சகட்ட குளறுபடியில் உ.பி.!

தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்...

(வடக்கு வாசல் திறக்கும்..)