\
vadakku vasal 10 series to Uttar Pradesh SIR controversy
yogi adityanathani

வடக்கு வாசல் - 10 | சர்ச்சையாகும் எஸ்ஐஆர் நடைமுறை.. உச்சகட்ட குளறுபடியில் உ.பி.!

எஸ்ஐஆர் என்னும் புதிய வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை, குறித்த விமர்சனங்களும் அச்சங்களும் ஏறக்குறைய அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது.
Published on: 

பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள்

ஜனநாயகம் என்பது மக்களுடைய வாக்குரிமையில்தான் முழுமை பெறுகிறது. சுதந்திர இந்தியாவில் தேர்தல் நடைமுறை, புனிதமானதாகவும் திருவிழா கொண்டாட்டத்திற்கு இணையாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், எஸ்ஐஆர் என்னும் புதிய வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை, குறித்த விமர்சனங்களும் அச்சங்களும் ஏறக்குறைய அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது.

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்தான் தேர்தல் முறைகேடுகளை பெரிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய அணில் மாசி என்பவர் மேற்கொண்ட முறைகேடுகள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலின் போது, சில வாக்குகளை வேண்டுமென்றே செல்லாத வாக்குகளாக மாற்றினார் என்கிற குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

Voters list
Voters listPTI

அடுத்ததாக மேற்கு வங்கத்திலும் மகராஷ்டிராவிலும் நடந்த முறைகேடுகள் பெரும் கவனம் பெற்றன. மகராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலிலிருந்து 2.07 கோடி பெயர்கள் நீக்கப்பட்டன. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நீதிமன்றத்தை நாடி, வாக்காளர் பெயர் நீக்கத்திற்கு எதிராகச் செய்யப்பட்ட மேல்முறையீடுகளில் 93% ஆணையத்திற்கு எதிராக முடிந்துள்ளன..

மேற்கு வங்கத்தில் 3,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட்டது முதல் தேர்தல் விதிமுறைகள் இருந்த நிலையிலும் பல மாநிலங்களில் நலத்திட்ட நிதி விநியோகம் செய்யப்பட்டது வரையில் தேர்தல் ஆணையத்தின் மீது, குறிப்பாக அதன் நம்பகத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுந்தன. காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

உத்தரப் பிரதேசமும் விதிவிலக்கல்ல...

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் உத்தரப் பிரதேசம் மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் நடைமுறை, இதுவரை பார்த்திராத அதிகார வரம்பு மீறல், மென்பொருள் சார்ந்த குளறுபடிகள், பாஜகவின் இறுக்கமான மௌனத்தோடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எஸ்ஐஆர் நடைமுறைக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது 2.05 கோடிக்கும் அதிகமான பெயர்கள் (சுமார் 13.2%) நீக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 13.39 கோடியாக குறைந்துள்ளது. இது சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

voters list
voters listANI

வரைவுப் பட்டியல் வெளியான பிறகு சமர்ப்பிக்கப்பட்ட 'படிவம்-6' மூலம் 84.3 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இது நீக்கப்பட்ட எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும், குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் பெயர்கள் எப்படி சேர்க்கப்பட்டன என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பிளிபித் மாவட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு பிற நபர்களின் பெயர்கள் உள்ளீடு செய்யப்பட்டது. இதனால் தனியார் கணினி பதிவு மைய ஆபரேட்டர்கள் செய்த உள்ளீடுகளை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிளிபித் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படிவம்-8 மாற்றங்கள், வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளன. மென்பொருள் சம்பந்தமாக ஏராளமான பிழைகள் இடம் பெற்றுள்ளன. லட்சக்கணக்கான படிவம்-6 விண்ணப்பங்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

சுல்தான்பூர் மாவட்டத்தில் 26 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்க, போலி கையெழுத்துடன் 'படிவம்-7' தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் ஆக்ராவைச் சேர்ந்த 6 அதிகாரிகளை ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. படிவம் 6, 7 & 8 உள்ளிட்டவை தவறாக கையாண்டதாக தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிட்டுள்ளது.

எஸ்ஐஆர் குளறுபடிகளை சரி செய்வதற்காக இந்திய கூட்டணிக் கட்சிகள், நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களையும் மேற்கொள்ளும்படி கோரிக்கை விடுக்கிறார்கள். வாக்காளர் பட்டியலை ஆதாரோடு இணைக்கவும், வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படவேண்டும் என்கிறார், அகிலேஷ் யாதவ். உ.பி போன்ற பெரிய மாநிலங்களில் இவற்றையெல்லாம் அமல்படுத்துவது சாத்தியமில்லாத விஷயம்.

voters list
voters listPTI

தங்களது கட்சியைச் சேர்ந்த வாக்காளர் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரே நபரின் பெயர் வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் மாவட்டங்களிலும் பலமுறை இடம்பெற்றுள்ளதாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலும், நீக்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாக பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 2.77 கோடி மக்கள், வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்துபோனதாக சொல்லப்பட்டு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் நிறைய பேர். இதனால் உயிரோடிருக்கும் வாக்காளர், தன்னுடைய வாக்குரிமையை இழக்க நேரிடும். தேர்தல் அலுவலர், தரவுகளை சரிபார்த்து நீக்கும்வரை எந்தவொரு பெயரும் நீக்கப்படக்கூடாது என்பதுதான் நியாயமான விஷயம்.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை, ஏற்கெனவே பல மாநிலங்களிலும் எழுந்தவைதான். கோவாவில் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 97 வாக்காளர்களில் 88 பேர் பின்னர் படிவம்-6 மூலம் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது.

படிவம்-6, சர்ச்சை விஷயத்திலும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. 1960 வாக்காளர்கள் பதிவு விதிகளின் கீழ் முறையான சட்டப்பூர்வ திருத்தங்களை மேற்கொள்ளாமல், படிவத்தில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்று சக ஆணையர்கள் ஜோஷியும் சாந்துவும் எழுத்துப்பூர்வமாகக் குறிப்பிட்டிருந்தனர். எனினும், தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் மாற்றியமைக்கப்பட்ட உறுதிமொழிப் படிவம் விநியோகிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளிக்காமல் தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது.

form 6
form 6

ECINet மென்பொருளின் செயல்பாடுகள் குறித்து சர்ச்சை இன்னும் தொடர்கிறது. சட்டப்பூர்வ காரணங்கள் எதையும் குறிப்பிடாமல் 5.38 லட்சம் வாக்காளர்களை ECINet மென்பொருள் தானாகவே நீக்கியது. பெயர் நீக்கம் குறித்த ஆப்ஷனில் 'இல்லை' (Absent), 'இடம்மாறியவர்' (Shifted), 'இரட்டைப் பதிவு' (Duplicate) மற்றும் 'இறந்தவர்' (Dead) என்ற மட்டுமே உள்ளது.

எஸ்ஐஆர் நடைமுறையை நியாயப்படுத்த சொல்லப்பட்ட விஷயங்களில் 'வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை' அடையாளம் காண செய்யப்படுவதாக சொன்ன காரணமும் உள்ளது. ECINet மென்பொருளில் வெளிநாட்டவரா என்பதற்கான ஆப்ஷன் தரப்படவில்லை. உண்மையில் அதுதான் நோக்கம் என்றால் அது நேர விரயம் என்கிறார்கள், தேர்தல் ஆய்வாளர்கள்.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் 82,255 வெளிநாட்டவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இதற்கு மாறாக, மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு கடததப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,568 ஆக மட்டுமே உள்ளது. ஆகவே, ஊடுருவலை கட்டுப்படுத்துவதும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்துவதற்காகவும் செய்யப்படுகிறது என்றால் அது நேர விரயம்தான். கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களை கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தவதை நியாயப்படுத்தவே முடியாது.

சர்ச்சைக்குரிய ECINet மென்பொருளை தேர்தல் ஆணையம் உலக அளவில் பிரபலப்படுத்த ஆரம்பித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிற நாடுகள் தங்களது சொந்த பதிப்புகளை உருவாக்க உதவுவதற்காக 'ECINet' மென்பொருள் தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இந்தியாவைப் போன்று கடுமையான வாக்காளர் சட்டங்களை உருவாக்கிட அமெரிக்காவும் விரும்புகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முன்வைக்கும் எந்தவொரு தரநிலையையும் உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும். ஆகவே, நமக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதும் உண்மை

சட்டப்பூர்வ மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ள நிலையில், சரிபார்க்கப்படாத வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல்களை நடத்துவது சட்டவிரோதச் செயல் என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத். எஸ்ஐஆர் நடைமுறையை உடனடியாக நிறுத்திவிட்டு, நீக்கப்பட்ட வாக்காளர்களை மறுபடியும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது. நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யவேண்டும். உச்சதீமன்றத் தீர்ப்பு, ஆண்டவன் தீர்ப்பு!

இதன் முந்தைய பகுதியைப் படிக்க: வடக்கு வாசல் - 9 | தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு - உலக அளவில் கவனம் பெறும் CJP-யின் போராட்டம்!

தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..

(வடக்கு வாசல் திறக்கும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com