வடக்கு வாசல் - 9 | தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு - உலக அளவில் கவனம் பெறும் CJP-யின் போராட்டம்!
மும்பை காவல்துறை அனுப்பிய நோட்டீஸ் சட்டவிரோதமானது. இந்திய சட்ட விதிகளின் படி 'ஓ.சி.ஐ.' கார்டு வைத்திருப்பவர்கள் எவரும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று குறிப்பிடப்படவில்லை. எவ்வித விசாரணையோ, விளக்கமளிக்க வாய்ப்பும் தராமல் நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார், நடிகர் இம்ரான் கான்.
இம்ரான் கான், பாலிவுட்டின் முக்கியமான நடிகர். 'டெல்லி பெல்லி' உள்ளிட்ட காமெடி, த்ரில்லர் படங்களில் நடித்தவர். அமீர்கான் அறிமுகமான 'கயாமத் சே கயாமத் தக்', அவரை பாலிவுட்டின் பெரும் ஸ்டார் நடிகராக்கிய 'ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக இம்ரான் கான் நடித்துள்ளார். 2008ல் 'ஜானே தூ... யா ஜானே நா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி, தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி சார்பில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இம்ரான் கானை, காவல்துறை கைது செய்திருந்தது. அமெரிக்க குடியுரிமை பெற்ற இம்ரான் கான், 'இந்திய வம்சாவளி கார்டு' (ஓ.சி.ஐ.) மூலமாக இந்தியாவில் வசித்து வருகிறார். வெளிநாட்டவர் சட்ட விதிகளின்படி, அரசியல் போராட்டத்தில் பங்கேற்றது விதிமீறல். ஆகவே, இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிறது மும்பை காவல்துறை.
மும்பை காவல்துறையின் தடாலடி நடவடிக்கைக்கு பின்னணி உண்டு. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து சென்ற மாதம் நடத்திய பிரம்மாண்ட பேரணி, தேசிய அளவில் கவனம் பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் இணைந்து நடத்திய பேரணி. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணியின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான 'எஸ்ஐஆர்' நடைமுறைக்கு எதிராகவும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் மும்பையில் நடத்திய 'விராட் கர்ஜனா மோர்ச்சா' (பிரமாண்ட கர்ஜனை பேரணி) என்று பெயரிடப்பட்ட இந்தப் பேரணி, தெற்கு மும்பையில் ஆரம்பித்து, மும்பை மாநகராட்சி தலைமையகம் வரை நடந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே நெருக்கத்தை கொண்டு வந்திருப்பதை பாஜக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டது. எஸ்ஐஆர் நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் பேசாத மகராஷ்டிராவின் பாஜக அரசு, நடிகர் இம்ரான் கான் சர்ச்சையில் துரிதமாக களத்தில் இறங்கியது.
நடிகர் இம்ரான் கானுக்கு எதிராக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடமும், மும்பை காவல்துறையிடமும் புகார் அளித்த பாஜக தலைவர் கிரிட் சோமையா, "இந்தியாவில் இது போன்று ஆயிரக்கணக்கான இம்ரான் கான்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறார்கள். ஆனால், நம்முடைய நாட்டை அவதூறாகப் பேசுகிறார்கள்" என்று பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கக் குடிமகனாக இருந்து கொண்டு இம்ரான் கான், இந்தியாவில் வாழ்வாதாரத்தை தேடும் நிலையிலும், இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியதும், பாஜகவின் நீண்ட நாளைய தேசபக்த பங்காளிகளான தாக்கரே கட்சியினரும் களத்திற்கு வந்துவிட்டார்கள்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் புகலிடம் பெற்று வாழ்ந்து வரும் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை ஏன் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். ஒரு தனிநபரை குறிவைத்து நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவது, நாட்டில் நிலவும் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுவதாக காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஓ.சி.ஐ (OCI) அட்டை என்பது வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற, தகுதியுள்ள இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படுவது. ஆனால், இது இந்திய குடியுரிமை அல்ல. ஆயுட்காலம் முழுவதும் பலமுறை இந்தியா வந்து தங்கி செல்ல முடியும். தொழில் செய்ய முடியும். ஆனாலும், சில விதிமுறைகளுக்கு உட்பட்டவைதான்.
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்பவருக்கு தேர்தலில் போட்டியிடும் உரிமையோ, போட்டியிடும் உரிமையோ கிடையாது. வெளிநாட்டினர் மற்றும் குடியேற்றம் தொடர்பான இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். ஓ.சி.ஐ அட்டை இந்திய வம்சாவளியினருக்கு சில சலுகைகளை கொடுத்தாலும், இந்தியக் குடிமகனுக்கு அரசியலமைப்பு சாசனம் தரும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதை எந்தவொரு சட்டப் பிரிவோ அல்லது விதியோ நேரடியாகத் தடுக்கவில்லை என்பது சரிதான். ஆனால், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19ன் படியான பேச்சு சுதந்திரம், இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே உண்டு. இந்திய வம்சாவளியினருக்கு இவையெல்லாம் பொருந்தாது.
இந்திய வம்சாவளியினரின் அரசியல் நடவடிக்கைளை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் அதிகாரமுண்டு. காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் வழக்குத் தொடர்தல் அல்லது ஓ.சி.ஐ அனுமதியை ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வாய்ப்புண்டு.
நடிகர் இம்ரான் கான் மட்டுமல்ல பிரபல என்.ஆர்.ஐ யூடியூபரான துருவ் ரதி போன்ற ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்பவர்களும் நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். டெல்லி காவல் துறையினர், துருவ் ரதியை ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அவரது குருகிராம் இல்லத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர், விடியற்காலையில் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், ஒரு நாள் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் விஷயத்திலும் இதுதான் நடந்தது. காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணை தொடர்கிறது. இதுவரை இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் மீது நடவடிக்கை என்பது குறித்து விபரங்கள் இல்லை. ஆனால், காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டங்கள் உலக அளவில் கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளன.
எஸ்.ஐ.ஆர் (SIR) மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் லண்டனிலும் நடந்தது. இங்கிலாந்தில் உள்ள இந்திய மாணவர்கள் அமைப்பு, பார்லிமென்ட் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை முன்பு நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக இந்திய தூதரகத்திற்கு வெளியே சிறிய அளவில் நடைபெற்றது என்றாலும் பார்லிமெண்ட் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது.
வாக்கு திருட்டை நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் துருவ் ரதி, கலந்து கொண்டார். அதே நேரத்தில் காந்தி சிலையின் மறுபக்கத்தில் இன்னொரு அமைப்பின் சார்பாக மோடி வாழ்க கோஷம் எழுந்தது. நாங்கள் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் விரும்பவில்லை. இந்தியர்களிடமும், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் உரையாடவே பார்லிமென்ட் சதுக்கத்திற்கு வந்துள்ளேன் என்று துருவ் ரதி விளக்கம் தந்தாலும் போராட்டத்தை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல காக்ரோச் ஜனதா பார்ட்டி விரும்புகிறது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டத்தை டெல்லியோடு நிறுத்தாமல் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப் போவதாக காக்ரோச் ஜனதா பார்ட்டி திட்டமிட்டுள்ளது. டெல்லிக்கு நேரில் வர முடியாதவர்கள், அவரவர் இருக்கும் இடத்திலேயே மூவர்ணக் கொடி பேரணிகளை நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 28-க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு நடிகர் இம்ரான் கானுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அடுத்த கட்ட நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை எஎதிர்த்து இம்ரான் கான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இம்ரான் கான் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டால் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.
அக்டோபர் 10 அன்று நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான் கானுடன் அவரது மனைவியும் அவரது உறவினரும் உடனிருந்தார்கள். வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்தில் உட்கார வைத்து நகரை சுற்றா வந்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால்தான் எங்களை விடுவிக்க நேரமானது என்று அவரது மனைவி லேகா வாஷிங்டன் விளக்கமளித்துள்ளார்.
மூவரையும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, சோஷியல் மீடியாவில் லேகா வாஷிங்டன் பதிவு செய்த படங்கள் மூலம்தான் விஷயத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
இம்ரான் கானின் மனைவியான லேகா வாஷிங்டன், சென்னையைச் சேர்ந்தவர். டிவி தொகுப்பாளினியாக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'ஜெயம் கொண்டான்' 'கல்யாண சமையல் சாதம்' , 'அரிமா நம்பி' போன்ற படங்களில் நடித்தவர்.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க: இங்கே க்ளிக் செய்யவும்..

