'ஆப்' இன்றி அமையா உலகு 13: Simple Expense Note - வரவு, செலவுகளை கவனிக்க உதவும் எளிய செயலி!

'ஆப்' இன்றி அமையா உலகு 13: Simple Expense Note - வரவு, செலவுகளை கவனிக்க உதவும் எளிய செயலி!
'ஆப்' இன்றி அமையா உலகு 13: Simple Expense Note - வரவு, செலவுகளை கவனிக்க உதவும் எளிய செயலி!

"வரவு எட்டணா, செலவு பத்தணா... அதிகம் ரெண்டனா, கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா..." என தனது பாடல் வரிகள் மூலம் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னதாகவே வரவை காட்டிலும் செலவு அதிகம் இருக்கக் கூடாது என்பதை எளிமையாக விளக்கியவர் கண்ணதாசன். அவர் அந்தப் பாடலில் சொன்னதைப் போல பலரும் சிக்கன சிகரங்களாக, பட்ஜெட் பத்மநாபன்களாக வரவு செலவுகளை கவனிப்பதில் கில்லியாக இருப்பார்கள்.

இருந்தாலும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக இன்று அனைத்தும் எளிதாகிவிட்டது. எளிய மாதத் தவணை கடன் (இஎம்ஐ), கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு இஎம்ஐ லோன், மொபைல் அப்ளிகேஷன் மூலமாக கடன் என கடன் தொடர்பான அலார்ட்டுகள் வருமானம் வங்கிக் கணக்கில் வந்து சேருவதற்கு முன்னதாகவே வந்துவிடுகின்றன. மாதம் முழுவதும் கடுமையாக உழைத்து பெறும் அந்த சம்பாத்தியம் கூட கைகளுக்கு வராமல் வங்கிக் கணக்கில் அப்படியே அந்த கடன்களால் கரைந்து விடுகின்றன. இது தவிர மின்சார பயன்பாட்டு கட்டணம், மொபைல் போன் ரீசார்ஜ் கட்டணம், பொழுதுபோக்கு சார்ந்த செலவு, மாதா மாதம் மளிகை செலவு, உணவக செலவு என தனி லிஸ்ட் ஒன்றும் உள்ளது.

இத்தகைய சூழலில் இன்றைய டிஜிட்டல் உலகில் எளிய முறையில் வரவு - செலவு கணக்குகளை கவனித்துக் கொள்ள வழிவகை செய்கிறது 'Simple Expense Note' என்ற கைப்பேசி செயலி. இதன் பெயரை போலவே இதனை பயன்படுத்துவதும் சிம்பிள்தான்.

Simple Expense Note! இந்த செயலியை பயன்படுத்தி தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர வரவு - செலவு கணக்கு விவரங்களை விரல்களின் நுனியில் நினைத்த நேரத்தில் தெரிந்துகொள்ள முடியும். முக்கியமாக இந்த செயலியை இணைய இணைப்பு இல்லாமல் ஆஃப்லைன் மோடிலும் பயன்படுத்த முடியும்.

தினந்தோறும் வரவு - செலவு கணக்கு சார்ந்த தரவுகளை இதில் Save செய்ய முடியும். கையடக்க கணக்கு நோட்டு புத்தகம் போல இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. வரவுகள் பச்சை நிறத்திலும், செலவுகள் சிவப்பு நிறத்திலும் மிளிர்கின்றன. இதன்மூலம் வரவை விட செலவு கூடினால் அதனை பயனர்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள முடியும்.

தினசரி செலவுகளான பெட்ரோல், டீ, சாப்பாடு என அனைத்தையும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல மாதாந்திர, தினசரி வருவாய் ஈட்டும் விவரத்தையும் பதிவு செய்யலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

> எளிய முறையிலான பயனர் அனுபவத்தை கொடுக்கு வேண்டும் என்ற நோக்கில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

> தினசரி வரவு மற்றும் செலவுகளை இந்த செயலியில் பதிவு செய்தவுடன் தவறாமல் Save செய்து கொள்ள வேண்டும். அதன்மூலம் வரவு - செலவு கணக்குகளை திறம்பட நிர்வகிக்க முடியும். வரவு மற்றும் செலவுகளை அக்கவுண்ட் நோட்டு புத்தகம் போல தனித்தனியே பதிவு செய்து கொள்ளலாம்.

> பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரவு - செலவை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்கு ரிப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

> காலண்டர் ஆப்ஷனை பயன்படுத்தி, அந்த வருடத்திற்கான வரவு - செலவை மொத்தமாகவும், மாதாந்திர ரீதியிலும் அறிந்துகொள்ளலாம்.

> இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு - செலவு விவரங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவும், மைக்ரோசாஃப்ட் டாகுமென்டாகவும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

> கிராஃப் (Graph) வடிவிலும் வரவு செலவு விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு லிங்க் > https://play.google.com/store/apps/details?id=com.expensenote.orca.expensenote

இந்த செயலியை போலவே Spendee, Pocket Expense with Sync, Expensify, Household Account Book, Budget Calculator (My Budget) மாதிரியான செயலிகளும் வரவு செலவு கணக்குகளை திறம்பட நிர்வகிக்க உதவுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com